நவம்பரில் உயர்ந்த ஏற்றுமதி சதவீதம்; பனியன் உற்பத்தியாளர்களுக்கு வந்தது 'தெம்பு'

நவம்பரில் உயர்ந்த ஏற்றுமதி சதவீதம்; பனியன் உற்பத்தியாளர்களுக்கு வந்தது தெம்பு
X

திருப்பூரில், நவம்பர் மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி 10.6 சதவீதம் உயர்ந்துள்ளது. ( கோப்பு படம் - பனியன் நிறுவனம்)

திருப்பூரில், கடந்த மூன்று மாதங்களை காட்டிலும், நவம்பர் மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி 10.6 சதவீதம் உயர்ந்துள்ளதால், பனியன் உற்பத்தியாளர் மத்தியில் புது தெம்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, கடந்த 2021 ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தை காட்டிலும், 2022 ஆம் ஆண்டு இதே மாதங்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடுமையாக சரிவடைந்தது. இதன்படி ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதம் 14.6 சதவீதமும், செப்டம்பர் மாதம் 24.21 சதவீதமும், அக்டோபர் மாதம் 34.1 சதவீதமும் சரிவடைந்தது.

இந்நிலையில், கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 10.6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் வெளி நாடுகளுக்கான கோடை கால ஆயத்த ஆடைகள் தயாரிப்புக்கு ஆர்டர்கள் கிடைக்கும் என, திருப்பூர் ஜவுளித் துறையினர் மத்தியில் நம்பிக்கை உருவாகியுள்ளது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிளீச்சிங், எம்ப்ராய்டரி நூல் மில்களில் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வரும் துறையாக உள்ளது. திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் நகராக உள்ளது.

இந்நிலையில், திருப்பூர் தொழில் துறையை பாதிக்கும் காரணிகளாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று முழு அடைப்பு மற்றும் நூல் விலை உயர்வு இருந்தது‌. மேலும் மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக மக்கள் பொருட்கள் வாங்குவதை குறைந்ததும், மற்றொரு காரணமாக அமைந்து விட்டது. கடும் நூல் விலை உயர்வால் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. இதனால் சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டதால், பல தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்துக்கான ஏற்றுமதி குறித்த தரவுகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டது. இதன்படி கடந்த 2021 நவம்பர் மாத ஆயத்த ஆடை ஏற்றுமதியுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22.71 சதவீதம் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் கே.எம்.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும், இந்த ஆண்டு நவம்பர் மாத ஆயத்த ஆடை ஏற்றுமதியானது கடந்த மூன்று மாத சரிவை காட்டிலும் அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சி விகிதம் ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும் தற்போது ஆஸ்திரேலியாவுடன் செய்து கொண்டுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (ECTA) வரும் டிசம்பர் மாதம் 29ம் தேதி முதல் வர உள்ளது. இது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். மேலும் பிரிட்டனுடன் இன்னும் இரண்டு மாதத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், சீனாவின் ப்ளஸ் ஒன் கொள்கையின் விளைவால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பையர்கள் தற்போது திருப்பூரில் ஆர்டர் கொடுக்க ஆர்வமாக உள்ளதாகவும், வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பங்களாதேஷ் நாட்டுடன் உள்ள வரி இல்லா ஒப்பந்தம் காரணமாக அங்கிருந்து ஏராளமான ஆயத்த ஆடை மற்றும் ஜவுளிகள் இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதியாவதால், உள்நாட்டு பனியன் வர்த்தகமும் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையை குறைக்க வேண்டும் என திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story
ai in future agriculture