பெண்கள், மாணவிகளுக்கு மறுக்கப்படும் இலவச பயணம் அரசு பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

பெண்கள், மாணவிகளுக்கு மறுக்கப்படும் இலவச பயணம்  அரசு பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
X

திருப்பூரில் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய, பெண்கள்-மாணவிகளை ஏற்ற மறுப்பதாக, புகார் எழுந்துள்ளது.

திருப்பூரில் இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்கள்-மாணவிகளை ஏற்ற மறுக்கும் அரசு பஸ் டிரைவர்கள் மீது, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் இலவச பயண பஸ்களை பெண்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அந்த வகை பஸ்களின் வண்ணம் மாற்றப்பட்டது.

அரசின் இலவச பயண திட்டத்தால் தமிழகம் முழுவதும் தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு பெண்களும் பயனடைந்து வருகின்றனர். ஆனால் திருப்பூரில் இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்களையும், மாணவிகளையும், அரசு பஸ் டிரைவர்கள் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தொழில் நகரமான திருப்பூரில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர். அதில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களாக இருப்பதால் அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இதேபோல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளையும், இலவச பஸ் பாஸ் மூலமாக பயணிக்கும் பள்ளி மாணவிகளையும் பஸ்களில் ஏற்ற அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மறுக்கின்றனர்.

இலவச பயணம் என்கிற ஒரே காரணத்தை காட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி சென்று பஸ்களை நிறுத்துவது, பெண் பயணிகள் ஏறும்போதே பஸ்சை இயக்குவது, இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவது, டிக்கெட் கொடுக்கும் போது ஒரு சில கண்டக்டர்கள் கோபமாகவும், அநாகரீகமாகவும் ஒருமையில் பேசுவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும், பிரச்சினைகளையும் பெண்கள் மற்றும் மாணவிகள் சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கவனித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story
ai in future agriculture