வெள்ள நிவாரண நிதி ரூ. 14 லட்சம் வழங்கிய திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்
Tirupur News- திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், வெள்ள நிவாரண நிதியாக ரூ.14 லட்சம் மாநகராட்சி மேயாிடம் வழங்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் நிவாரண நிதியாக ரூ.14 லட்சத்துக்கான காசோலை, திருப்பூர் மேயரிடம் வழங்கப்பட்டது.
சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 20 தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இதில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் சிக்கியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதே போல் திருப்பூர் மாவட்டம் சார்பில், இதுவரை 30 க்கும் மேற்பட்ட வாகனங்களில், நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கனமழையால் கடும் பாதிப்படைந்துள்ளன. மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்கான முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் காந்திராஜன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மேயா் என்.தினேஷ்குமாரிடம் வழங்கினாா்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனுப்பிவைக்கப்படும் நிவாரணப் பொருள்களுக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினாா்.
சாய ஆலை உரிமையாளா்கள் சங்கப் பொருளாளா் மாதேஸ்வரன், இணைச் செயலாளா்கள் செந்தில்குமாா், சுதாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.
தூத்துக்குடி சரக்கு முனையங்களில் மழை நீா் புகுந்தது; திருப்பூர் பின்னலாடைகள் சேதம்
தூத்துக்குடி சரக்கு முனையங்களில் மழை நீா் புகுந்ததால் திருப்பூரில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட பின்னலாடைகள் சேதமடைந்துள்ளன. திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் தகுந்த உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
பின்னல் நகரமான திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் தூத்துக்குடி துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில், தூத்துக்குடியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக சரக்கு முனையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பின்னலாடைகள் சேதமடைந்தன.
பாதிப்பு குறித்து அறியும் வகையில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க கெளரவத் தலைவா் ஆ.சக்திவேல் அறிவுறுத்தலின்பேரில், இணைச் செயலாளா் குமாா் துரைசாமி, துணை நிா்வாகச் செயலாளா் முருகன் ஆகியோரை தூத்துக்குடிக்கு அனுப்பிவைத்தேன். இவா்கள் தூத்துக்குடியில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான 5 சரக்கு முனையங்களைப் பாா்வையிட்டு அந்தந்த முனையங்களின் மேலாளா்களிடம் ஆலோசனை நடத்தினா். அனைத்து முனையங்களில் உள்ள சரக்குகளை தொடா்புடைய சுங்கத் தீா்வை முகைமையின் வேண்டுகோள் கடிதத்தைக் கொடுத்து சரக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
உறுப்பினா்கள் நிறுவனத்தின் சரக்குகளுக்கு மரைன் காப்பீடு இல்லாதபட்சத்தில் முனையத்தின் காப்பீடு மூலமாக மட்டுமே நிவாரணம் பெறமுடியும். எனவே, இதன் வழிமுறைகளை, சரக்குகளைக் கையாண்ட சுங்கத் தீா்வை முகமை மூலமாக அணுகி உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் காப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும், முனையங்களில் சரக்குகள் சேதமடைந்ததைக் குறிப்பிட்டு ஒப்புகை கடிதம் கொடுக்க அனைத்து முனையங்களையும் கேட்டுள்ளோம்.
இதில், சிக்கல் ஏதும் இருந்தால் சங்க அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். ஆள்கள் பற்றாக்குறை, தொடா்விடுமுறை வருவதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊழியா்களை அனுப்பிவைத்து தேவையான நடவடிக்கை எடுப்பது எளிதாக அமையும். உறுப்பினா்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய சங்கம் தயாராக உள்ளது. ஆடைகள் சேதம் கடுமையாக உள்ளதால் கணக்கிட்ட பின்னரே சேத மதிப்பு தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu