திருப்பூர் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி உண்ணாவிரதம்
Tirupur News,Tirupur News Today- இடுவாயில், டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Tirupur News,Tirupur News Today- மங்கலம் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் இருந்து சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இது குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதாகவும்,பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது எனக்கூறியும் இடுவாய் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக இந்த பகுதியில் இருந்து அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இடுவாய் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையை இடுவாய் பகுதியில் இருந்து மாற்றி சின்னக்காளிபாளையம் ரோட்டில் பொம்மங்காடு என்ற பகுதியில் அமையவிருப்பதாக தெரிகிறது. மதுக்கடை கட்டிடத்திற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன், திருமலை கார்டன், ஜி.என். கார்டன், செந்தில்நகர், பாப்பாங்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் இடுவாய் ஊராட்சி-அண்ணாமலைகார்டன் பஸ் ஸ்டாப் அருகே பந்தல் அமைத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை காலை 8 மணிக்கு தொடங்கினர்.
இதில் பொதுமக்கள் , குழந்தைகள், பெண்கள், கருப்புபேட்ஜ் அணிந்து, ‘குடியிருப்பு பகுதிக்குள் குடி எதற்கு, விளைநிலங்கள் வீணாப்போக விடமாட்டோம்,’ என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது,
சின்னக்காளிபாளையம் அதிகளவில் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு வெங்காயம், புகையிலை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால் பிளாஸ்டிக் கவர்கள், மதுபாட்டில்கள், போன்றவற்றால் விவசாய நிலங்கள் பாழ்படும்.
மேலும் அண்ணாமலை கார்டன், திருமலைகார்டன், ஜி.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடுவாய் பகுதியில் இருந்து சின்னக்காளிபாளையம் செல்லும் ரோட்டில் பொம்மங்காடு பகுதியில் மதுக்கடை அமைக்க மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகளை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும், என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu