திருப்பூரில் உள்ள உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ. 127 கோடிக்கு காய்கறி விற்பனை
(கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் கடந்த ஓராண்டில் 127 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது.
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் ஸ்டாப்பில், தெற்கு உழவர் சந்தையும், திருப்பூர் பெருமாநல்லூர் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் பின் வடக்கு உழவர் சந்தையும் செயல்படுகிறது. தெற்கு சந்தைக்கு, 200 முதல், 350 விவசாயிகளும், வடக்குக்கு, 100 முதல், 150 விவசாயிகளும் தினசரி அதிகாலை, 2:00 மணிக்கு காய்கறி கொண்டு வருகின்றனர். காலை, 8:00 மணி வரை சுறுசுறுப்பாக சந்தை நடக்கிறது.
கடந்த, 2023ம் ஆண்டில், தெற்கு உழவர் சந்தையில், 32 ஆயிரத்து, 127 மெட்ரிக் டன் காய்கறி, 99.72 கோடி ரூபாய்க்கும், வடக்கு உழவர் சந்தையில், 8,474 மெட்ரிக் டன் காய்றி, 27.28 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகளவில் காய்கறி வரத்து, விற்பனையும் உள்ள உழவர் சந்தைகள் பட்டியலில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு, 80 முதல், 92 டன் வரை காய்கறி, பழங்கள் வருகிறது. தக்காளி மட்டும், 35 டன்னுக்கு கூடுதலாக வருவதால், தொடர்ந்து முதலிடத்தில் திருப்பூர் தெற்கு உழவர் சந்தை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் அதிக மக்கள் தொகை நிறைந்த நகரங்களில் திருப்பூரும் ஒன்றாக முன்னிலையில் உள்ளது. தவிர திருப்பூரை சுற்றிலும் அவிநாசி, பல்லடம், காங்கயம், ஊத்துக்குளி, தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, சோமனூர், மங்கலம், குன்னத்தூர் என மிக அதிகளவில் கிராமப்புறங்கள் நிறைந்த பகுதிகளாக இருப்பதால், அங்கு அதிகளவில் விவசாயம் நடக்கிறது. அதன்காரணமாக, திருப்பூர் உழவர் சந்தைகளில் தொடர்ந்து காய்கறி வரத்து அதிகரித்து, விற்பனையில் திருப்பூர் உழவர் சந்தைகள் முன்னிலை பெற்று வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் காய்கறி விற்பனை என்பது 100 கோடி ரூபாயை எளிதாக கடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu