வளம் குன்றா உற்பத்தியில் தயாராகும் ஆடைகளுக்கு அரசு சலுகைகள் வழங்க கோரிக்கை
Tirupur News- வளம் குன்றா உற்பத்தியில் தயாராகும் ஆடைகளுக்கு அரசு சலுகைகள் வழங்க டீ சங்கம் கோரிக்கை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரஜக்தா வர்மாவை நேரில் சந்தித்து பேசினர்.
இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் தலைமையில் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோவன், இணை செயலாளர் குமார் துரைசாமி, ஆலோசக கமிட்டி உறுப்பினர்கள் பரமசிவம், சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் இணை செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, வளம்குன்றா உற்பத்தி கோட்பாட்டின் கீழ் திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மரபுசாரா மின்உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளை செய்துள்ளது குறித்து எடுத்துக்கூறினார்கள்.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் வளம் குன்றா உற்பத்தி குறித்து உலக வர்த்தக நிறுவனங்களுக்கும், இறக்குமதி நிறுவனங்களுக்கும் தெரிவிக்கும் பணியை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் முக்கிய நகரங்களில் மத்திய அரசு சார்பில் கண்காட்சிகளை நடத்தி திருப்பூரில் உள்ள வளம் குன்றா உற்பத்தி குறித்து தெரிவிக்க வேண்டும். இதன் மூலமாக இறக்குமதி நிறுவனங்கள் திருப்பூரின் சிறப்பை அறிந்து புதிய ஆர்டர்களை வழங்குவதற்கு வசதியாக அமையும் என்று சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் கூறினார்.
இதை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இணை செயலாளர் கூறினார்.
வளம் குன்றா உற்பத்தியில் தயாரிக்கும் ஆடைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக எச்.எஸ். கோர்டை புதிதாக அமைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கும் ஆடைகளுக்கு அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்யும்போது அதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதற்காக அதிகமான பொருட்செலவு ஏற்படுகிறது. மத்திய அரசு இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தனியாக சலுகைளை வழங்கினால் உதவியாக அமையும் என்றார்.
திருப்பூர் மாநகராட்சியை முன்மாதிரியாக எடுத்து, பனியன் கழிவுகளை தனியாக எடுத்து அவற்றை மறுசுழற்சி செய்வது தொடர்பாக மேயர், ஆணையாளருடன் ஆலோசனை நடத்த மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக இணை செயலாளர் தெரிவித்தார்.
தனியார் அமைப்பு மூலமாக விரைவில் திருப்பூரில் ஆய்வு செய்து முடிவுகளை மத்திய அரசிடம் இன்னும் 6 மாதங்களில் சமர்ப்பித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இணை செயலாளர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu