திருப்பூர்; சுத்திகரிப்பு மையத்தில் சோதனை அடிப்படையில் சுத்திகரிப்பு பணி துவக்கம்
Tirupur News- திருப்பூர் சுத்திகரிப்பு மையத்தில் சோதனை ஓட்டம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் நகராட்சியாக இருந்த போது 2007ல் புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில் எஸ்.பெரியபாளையம் பகுதியில் 1.2 கோடி லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இது கடந்த 2009ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இதில் 16 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.நகரம் வளர்ச்சியடைந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு பகுதிகளும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பாதாள சாக்கடை பயன்பாடு அதிகரித்தது. அதனடிப்படையில் அம்ரூத் திட்டத்தில் 640 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான பணி துவங்கியது.
அவ்வகையில் மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு மற்றும் எஸ்.பெரியபாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணி துவங்கி முடிவடைந்துள்ளது. இதில் 10 மண்டலங்களாக இணைப்பு பகுதிகள் திட்டமிடப்பட்டு 17 பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீர் 11 நீரேற்று மையங்கள் வழியாக உந்தப்பட்டு இந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இரு மையங்களும் தலா 3.6 கோடி லிட்டர் கழிவு நீரை கையாளும் திறன் கொண்டது. ஏறத்தாழ 75 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள், 600 கி.மீ., நீளத்தில் குழாய்கள் பதித்து கொண்டு செல்லும் வகையில் பணிகள் நிறைவடைந்து தற்போது வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது.
முழுமையாக தயார் நிலையில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில் தற்போது சோதனை அடிப்படையில் சுத்திகரிப்பு பணி நடைபெறுகிறது. கழிவு நீரேற்று மையங்களிலிருந்து ராட்சத குழாய் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர் பல்வேறு கட்டங்களாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.அதன்பின் கழிவு நீர் துர்நாற்றமில்லாத நல்ல நீராக மாற்றப்படுகிறது. தொடர்ந்து, ஜிக் ஜாக் முறையில் குளோரின் கலந்து பின் வெளியேற்றப்படுகிறது.
தற்போது சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் நொய்யல் ஆற்றுக்கு சென்று சேருகிறது. சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலம், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு இதை வழங்கினால் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நீர் தேவைக்கு தீர்வு ஏற்படும்.பிரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் தனித்தனியாக சேகரித்து அதற்குரிய பகுதிகளில் அகற்றப்படுகிறது. இதில் மக்கும் கழிவுகளாக பிரிக்கப்படும் கழிவுகள் மற்றொரு பகுதியில் பிராசஸிங் செய்து உரமாக மாற்றப்படுகிறது.திடக்கழிவுகள் மறு சுழற்சி பயன்பாட்டுக்காக பிரித்து அதற்குரிய வகையில் கையாளப்படுகிறது. பாலிதீன் போன்ற கழிவுகள் தனியாகவும், கண்ணாடி பாட்டில் போன்ற கழிவுகள் தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu