திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையாத பஸ்கள்; நெரிசலில் சிக்கி அவதிப்பட்ட மக்கள்
Tirupur News- பஸ்களால் பஸ் ஸ்டாண்டுக்குள் ஏற்பட்ட நெரிசல்
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டுக்குள் நேற்று சிறப்பு பஸ்கள் உட்பட பல்வேறு பஸ்கள், உள்ளே நுழைய நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால், பயணிகள் அவதிப்பட்டனர்.
விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் போது, வழக்கமான பஸ்கள் உட்பட பிற பஸ்களை டிரைவர்கள் ஓரமாக நிறுத்தாததால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு வெளியே போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. பஸ் ஸ்டாண்ட் வந்த பின்பும், உள்ளே செல்ல வழியின்றி பஸ் டிரைவர், பஸ் விட்டு இறங்க வழியில்லாமல் பயணியர், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஞாயிறு தினமான நேற்று, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைய வழியில்லாமல் காமராஜர் ரோடு, ரவுண்டானா, புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனை வரை அரை கி.மீ., துாரத்துக்கு, பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் காலை, 9:00 மணி முதல், 9:30 வரை காத்திருந்தன. பொள்ளாச்சி, உடுமலை பஸ்கள் நிறுத்துமிடத்தில் முன்கூட்டியே சென்ற பஸ்கள் 'ரேக்' இல்லாமல், நடுவழியில் நின்றதால், பின் தொடர்ந்து அடுத்தடுத்த பஸ்கள் வர முடியவில்லை.
பஸ் டிரைவர்கள் ஒருவருக்கொருவர் ஹாரனை அழுத்தி பிடித்தபடி முன்னேற தயாராக, பஸ் ஸ்டாண்ட் வந்தும் பஸ் விட்டு இறங்க முடியாமல் பயணிகள் பரிதவித்தனர். 'பஸ் நிற்கும் முன் இறங்க வேண்டாம்' என நடத்துனர்கள் தெரிவித்ததால், பஸ் இருக்கையில் இருந்து எழுந்து, படிக்கட்டில் நின்றபடியே காத்திருந்தனர்.
பயணிகள் கூறியதாவது,
விடுமுறை தினம் என்றால் பஸ் ஸ்டாண்டுக்கு வருவோர் கூட்டம் அதிமாகிறது. பஸ்களும் கூடுதலாக இயக்கப்படுகிறது. 'ரேக்'கில் இடமில்லாததால், உள்ளே நுழையும் பஸ்களை அப்படியே நிறுத்துவதால், பஸ் வெளியேறிச் செல்லவும், உள்ளே வரவும் வழியில்லாத நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார், பஸ் இயக்க குழுவினர் யாரும் பணியில் இருப்பதில்லை. ஒழுங்குபடுத்தவும் வழியில்லை, என்றனர்.
அரசு பஸ் டிரைவர்கள் சிலர் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி உள்ளது. ஆனால், பஸ்களை நிறுத்துவதில், டிரைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை. தமிழகத்தில் எந்த பஸ் ஸ்டாண்டிலும் இல்லாத வகையில் திருப்பூரில் தான், மினி பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் நிற்கின்றன. வழியை மறைத்து சகட்டுமேனிக்கு தனியார் டவுன் பஸ், மினி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. கொடுவாய், காங்கயம், அவிநாசி பஸ்கள் 'ரேக்'கில் நிறுத்தப்படுவதில்லை.
'ரேக்'குக்கு முன்னதாக நின்று கொள்வதால், பின் தொடர்ந்து வரும் பஸ்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நெரிசலை தவிர்க்க மினிபஸ்களை முழுமையாக வெளியே இருந்த இயக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தாறுமாறாக நிறுத்தப்படும் அரசு, தனியார் பஸ் எதுவாக இருப்பினும் தயக்கமின்றி, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க, அபராதம் விதிக்க போலீசார் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இப்படி செய்யலாமே!
பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நிறைய இடம் உள்ளது. திருப்பூரில் இருந்து தாராபுரம் ரோடு வழியாக கொடுவாய், பல்லடம் ரோடு வழியாக பல்லடம் பகுதிக்கு இயங்கும் டவுன் பஸ்களை பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதியில் நிறுத்தி கூட அங்கிருந்து இயக்கலாம். நெரிசல் ஏற்படுவதும் குறைவதுடன், பஸ் ஸ்டாண்டுக்குள் இடம் இன்னமும் கிடைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu