ஆடி கடைசி வெள்ளியன்று, பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட பத்ரகாளியம்மன்; பக்தர்கள் பரவசம்
Tirupur News,Tirupur News Today- ஆடி மாதம் கடைசி வெள்ளி தினமான நேற்று, உடுமலையில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார்.
Tirupur News,Tirupur News Today- பல்வேறு சிறப்புகள், பெருமைகள் வாய்ந்த ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நேற்று பக்தர்களால், அம்மன் கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆடி மாதம், அம்மனுக்கு விசேஷமான மாதமாக ஆண்டுதோறும் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அம்மனுக்கு வாரந்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆடி மாத 4வது (கடைசி) வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூரில் உள்ள அம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில், போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், பிரிட்ஜ்வே காலனி ஓம் சக்தி கோவில், அரிசிக்கடை வீதி மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள், கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, கேசரி, லெமன் சாதம், தக்காளி சாதம் போன்றவையும், வழங்கப்பட்டன.
பணத்தாள்களில் அலங்காரம்
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, கரன்ஸி பணத்தாள்களால், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் என, சுவாமிக்கு அலங்காரம் செய்து, பணமாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. மேலும், கருவறை சுவர் பகுதிகள், சுவாமி பீடம் முழுக்க ரூபாய் தாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. கூடைகளில் 500- ரூபாய் பணக்கட்டுகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள், பரவசத்துடன், பத்ரகாளிம்மனை வழிபட்டுச் சென்றனர்.
உடுமலையில் ஆடி வெள்ளி; கோவில்களில் திரண்ட பக்தர் கூட்டம்
உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள், விபூதி, அபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாரியம்மன் சூலத்தேவருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் பலிபீடம் மற்றும் திரிசூலத்திற்கு எலுமிச்சைகனி சாற்றியும் வழிபட்டனர். அத்துடன் ஆடி மாத சிறப்பாக கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று சிவசக்திகாலனி ராஜகாளியம்மன் கோவில் மற்றும் கணபதிபாளையம் உச்சி மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பெண்கள் திரளானோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் சமேத ராஜமன்னார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனால் கோவில்கள் விழாக்கோலம் பூண்டதுடன், பக்தர்கள் கூட்டமும் அதிக அளவில் காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu