திருப்பூரில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

திருப்பூரில், 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சிறுவர்-சிறுமிகள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 34-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
மாநகராட்சியில் 31 ஆயிரத்து 728 சிறார்கள், 42 ஆயிரத்து 300 இளம் சிறார்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 லட்சத்து 67 ஆயிரத்து 420 என மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 508 பேர் உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 14 ஆயிரத்து 463 பேருக்கு முதல் தவணையும், 6 லட்சத்து 24 ஆயிரத்து 617 பேருக்கு 2-வது தவணையும், 53 ஆயிரத்து 257 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் முகாமில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி 2-வது தவணை பெற்று 6 மாதம் அல்லது 28 வாரங்கள் நிறைவடைந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில் வழங்கப்படும். ஒரு நபர் கூட விடுபடாமல் அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் 190 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ரயில், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்காக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 1,140 பேர் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என, கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu