திருப்பூரில் மூங்கில் கூடை கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

திருப்பூரில் மூங்கில் கூடை கடையில், இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
திருப்பூரை அடுத்துள்ள அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி(வயது 55). இவர் திருப்பூர் நொய்யல் வீதி கஜலட்சுமி தியேட்டர் அருகே மூங்கில் மூலம் செய்யப்படும் கூடைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி இங்கிருந்து விற்பனை செய்து வருகிறார். மேலும் சொந்தமாகவும் மூங்கில் கூடைகளை தயாரித்தும் விற்பனை செய்து வருகிறார்.
இவ்வாறு தயாரிக்கப்படும் மற்றும் வெளியில் இருந்து வாங்கப்படும் மூங்கில் கூடைகளை நொய்யல் வீதியில் உள்ள கடையில் அடுக்கி வைத்துள்ளார். இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இந்த மூங்கில் கூடைகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகின்றார்.
இந்நிலையில், இன்று மதியம் பாப்பாத்தி கடைக்கு வெளியே அமர்ந்து மூங்கில் கூடையை பின்னிக் கொண்டிருந்தார் அப்பொழுது கடைக்குள் இருந்து கரும் புகை வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், கடையிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் உடனடியாக தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், உள்ளே மூங்கில் கூடைகள் இருந்ததால் தீ மளமளவன பற்றி எரிந்தது.
இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், மேலும், திருப்பூர் வடக்கு போலீசார் அந்த இடத்திற்கு வந்து பொதுமக்கள் தீ எரியும் பகுதிக்கு செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து அந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதியில், பட்டப்பகலில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu