மகளிர் குழுக்களுக்கு 83.75 லட்சம் ரூபாய் கடன் வழங்கல்

திருப்பூரில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 83.75 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை, எம்.பி., சுப்பராயன் வழங்கினார்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகுழு குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகுழு தலைவரான எம்.பி.சுப்பராயன் தலைமை வகித்தார். கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், எம்.பி.,கள் நடராஜன் (கோவை), கணேசமூர்த்தி (ஈரோடு), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 83.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெருங்கடன் உதவிகளை எம்.பி., சுப்பராயன் வழங்கினார்.
சுப்பராயன் பேசுகையில், ''மத்திய, மாநில அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும்.இப்பணிகளை மேற்கொள்ளும் போது, இடையூறு ஏற்படுமனால், அவற்றை உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து தீர்வு செய்து, பணிகளை முடிக்க வேண்டும்,'' என்றார்.
கோவை எம்.பி., நடராஜன் பேசுகையில், ''மாவட்டத்தில் ஒரு மாதத்தில், 100 கோடி ரூபாய் கல்வி கடன் தருவதென இலக்கு நிர்ணயித்து வேலை செய்கின்றனர். நடப்பு ஆண்டுக்கு, 350 கோடி கல்வி கடன் தருவதாக முடிவு செய்துள்ளனர்.ஆனால், ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கும் திருப்பூரில், 15 கோடி ரூபாய் மட்டுமே கல்வி கடன் அளித்ததாக அறிக்கை தந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
தற்காலிக தினக்கூலி ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊதியம் நிர்ணயித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இந்த மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, ஆறு நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 265 கிராம ஊராட்சிகளில் கலெக்டரின் ஊதிய உயர்வு ஆணை அமலாக்கப்படவில்லை. இதை பற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் கேட்டால், பணம் இல்லை என்று காரணம் சொல்கின்றனர்,'' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu