போலீஸ் ஜீப் மோதி, 7 வயது சிறுமி உயிரிழப்பு; விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது

போலீஸ் ஜீப் மோதி, 7 வயது சிறுமி உயிரிழப்பு; விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது
X

Tirupur News,Tirupur News Today- சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், சமாதானம் பேசிய போலீசார். 

Tirupur News,Tirupur News Today-திருப்பூர் அருகே நல்லூரில் போலீஸ் ஜீப் மோதி 7 வயது சிறுமி உயிரிழந்தாள். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tirupur News,Tirupur News Today- தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களது மகன் சஞ்சய் (17), மகள் திவ்யதர்ஷினி (7).. தஞ்சாவூரில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், ராஜேஸ்வரி தனது மகன் மற்றும் மகளுடன் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் வசிக்கிறார். பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். திவ்யதர்ஷினி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்நிலையில், நேற்று மாலை ராஜேஸ்வரி தனது மகள் திவ்யதர்ஷினியுடன் ஸ்கூட்டரில் விஜயாபுரத்தில் இருந்து, திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர்கள் திருப்பூர்-காங்கயம் ரோடு நல்லூர் பகுதியில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த போலீஸ் ஜீப், ராஜேஸ்வரி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மிக வேகமாக மோதியது.

இந்த விபத்தில் ராஜேஸ்வரியும், அவருடைய மகளும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அவர்கள் 2 பேர் மீதும் போலீஸ் ஜீப்பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அந்த இடத்திலேயே சிறுமி திவ்யதர்ஷினி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தாள். ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக ராஜேஸ்வரியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய போலீஸ் ஜீப்பை ஓட்டி வந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர் வீரச்சின்னன் (35) என்பவரை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படை காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் வனிதா, நல்லூர் உதவி கமிஷனர் நந்தினி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

சாலை மறியல் காரணமாக திருப்பூர்-காங்கயம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மாணவியின் உடலை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் ஜீப் மோதி, ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊர்க்காவல் படை வீரர் கைது

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வீரசின்ன கண்ணன் மீது 304 ஏ பிரிவின் கீழ் அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று காலை அவரை கைது செய்தனர் . மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story