திருப்பூரில் 21-வது நிட்ஷோ கண்காட்சி; ஆகஸ்ட் 11ல் துவக்கம்
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், 21வது நிட்ஷோ கண்காட்சி, வரும் ஆகஸ்ட் 11ம் தேதி துவங்குகிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதுடன், பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் நிட்ஷோ கண்காட்சி விளங்கி வருகிறது. இதனால், நிட்ஷோ கண்காட்சி மூலம், திருப்பூர் தொழில் துறையினர், புதிய நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதற்கும், அதை தங்களது தொழில் உற்பத்தியில் பயன்படுத்துவதற்கும் முன்வருவதால், பனியன் துறை பல விதங்களில் வளர்ச்சியடைகிறது. உலக நாடுகளுடன், தொழில் போட்டியில் சவால் விடும் வகையில், சிறந்த உற்பத்தியை தரவும் முடிகிறது. அந்த வகையில், இதுபோன்ற தொழில்நுட்ப கண்காட்சிகள், தொழில் துறையின் வளர்ச்சிக்கு மிக அத்யாவசியமானதாக இருந்து வருகின்றன.
திருப்பூர்-காங்கயம் மெயின் ரோட்டில் ஹவுசிங் யூனிட் பஸ் ஸ்டாப் அருகே, டாப்லைட் மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் நவீன எந்திரங்களை காட்சிப்படுத்த, பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றன.
இதுகுறித்து, நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது,
நிட்ஷோ கண்காட்சி அரங்கம் முற்றிலும் குளிரூட்டப்பட்டது. 6 பெரிய அரங்குகளில், 450 ஸ்டால்கள் இடம்பெறும் வகையில் திட்டமிட்டுள்ளோம். பின்னலாடைத் துறையினருக்கு வரப்பிரசாதமாக அமையும் வகையில் இந்த கண்காட்சியில் நிட்டிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட அனைத்து வகையான இயந்திரங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக பிரிண்டிங் துறையில் அதிநவீன இயந்திரங்கள் அதிகம் இடம்பெறுகிறது.
ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, சீனா, தைவான் நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் நவீன இயந்திரங்கள் இடம்பெறுகின்றன. 25 தையல் இயந்திர நிறுவனங்கள், 15-க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள், டேப், ரோல், எலாஸ்டிக் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 12-க்கும் மேற்பட்ட நிட்டிங் இயந்திர நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும். டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள் இடம்பெறுகின்றன.
இத்தாலியில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சி இடம்பெற்ற நவீன இயந்திரங்கள், திருப்பூரில் நடைபெற உள்ள நிட்ஷோ கண்காட்சியில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu