திருப்பூரில் வாகன விதிகளை மீறியதாக ஓராண்டில் 2 லட்சம் வழக்குகள் பதிவு; போலீஸ் கமிஷனர் தகவல்
Tirupur News- திருப்பூரில் வாகன விதிமீறல் செய்த 2 லட்சம் வழக்குகள் பதிவு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகரில் மோட்டாா் வாகன விதிகளை மீறியதாக ஓராண்டில் 2 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் நேற்று நடந்த செய்தியாளா்கள் சந்திப்பில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமாா் அபிநபு கூறியதாவது,
திருப்பூா் மாநகரில் மோட்டாா் வாகன விதிகளை மீறியதாக நிகழாண்டு 2,01,627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.12.31 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் நிகழாண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 76 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். 2022- ம் ஆண்டில் 78 பேரும், 2021- ம் ஆண்டில் 59 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மாநகரில் கடந்த ஓராண்டில் ரூ.2.96 கோடி மதிப்பிலான சொத்துகள் களவு போனதில் ரூ.2.56 கோடி மதிப்பிலான (87 சதவீதம்) சொத்துகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாக உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சாலை விபத்துகளில் நிகழாண்டு 142 போ் உயிரிழந்த நிலையில், 2022 -ம் ஆண்டில் 159 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீத இறப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை தொடா்பாக நிகழாண்டு 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 301 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 176 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தொடா்பாக 1,746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,757 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3,397 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 102 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடா்பாக 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 262 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.1.71 லட்சம், 14 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக 2,437 போ் கைது செய்யப்பட்டு 3,401 லிட்டா் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டு மோட்டாா் வாகன விதிகளை மீறியதாக 2,01,627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.12.31 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்த சந்திப்பின்போது, திருப்பூா் வடக்கு துணை ஆணையா் அபிஷேக் குப்தா, திருப்பூா் தெற்கு துணை ஆணையா் வனிதா ஆகியோா் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu