‘டாஸ்மாக்’ ஊழியர்களை மிரட்டி ‘தக்காளி’ பையை பறித்த திருடர்கள்; உடுமலை அருகே ‘காமெடி’
Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே, தக்காளி பையை அபகரித்துச் சென்ற திருடர்கள் (மாதிரி படங்கள்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு உள்ளது. இங்குள்ள மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. இங்கு உடுமலை எஸ்.பி. புரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(வயது 42), சரவணன் (44) ஆகியோர் ஊழியர்களாக பணிசெய்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில், வழக்கம் போல் பணிமுடிந்த பிறகு இரவில், டாஸ்மாக் மதுக்கடையை மூடிவிட்டு வசூலான பணம் ரூ.3.50 லட்சத்தை பையில் கட்டி, மொபட் இருக்கைக்கு அடியில் வைத்தனர். மேலும் வீட்டிற்கு வாங்கிய தக்காளி பையை முன்பக்கம் மாட்டிக்கொண்டு, இருவரும் புறப்பட்டனர். வாளவாடி பிரிவு அருகே மொபட் செல்லும் போது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி. டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரும் விழுந்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய 3பேர் வீச்சரிவாளை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறி சத்தம் போட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர், நிலைமையை புரிந்து கொண்டு காரின் முன்பாக தனது பைக்கை நிறுத்தினார். உஷாரான கொள்ளையர்கள் பிரகாஷ், சரவணன் வந்த மொபட்டில் இருந்த பையை, வேகமாக எடுத்துக்கொண்டு காரில் தப்பினர்.
இந்நிலையில் கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது, பணம் அப்படியே இருந்தது. மொபட்டின் முன்பக்கம் தொங்கவிடப்பட்டிருந்த தக்காளி பையை காணவில்லை. அதில் பணம் இருக்கிறது என்று எண்ணி திருடர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் பிரகாஷ், சரவணன் நிம்மதி அடைந்தனர்.
மேலும் காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தனர். மேலும் தளி போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவம் குறித்தும் புகார் மனு அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, தக்காளி பையுடன் எஸ்கேப் ஆன திருடர்களை தேடி வருகின்றனர்.
தற்போது தக்காளி விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வரும் நிலையில், பணத்திற்கு பதிலாக தக்காளி பையை திருடர்கள் திருடி சென்ற சம்பவம் உடுமலை பகுதியில் காமெடியாக பேசப்படுகிறது.
டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்த 3.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுக்காமல், அவர்கள் வைத்திருந்த தக்காளி பையை திருடர்கள் அவசர கதியில் திருடிச் சென்றாலும் தக்காளி விக்கிற விலையில், அதுவும் அவர்களுக்கு குறைந்தபட்சத்தில் கிடைத்த ஒரு லாபம் தான் என, கிண்டலாக பேசி சிரிக்கின்றனர். கட்டுக்கட்டாக பணத்தை எதிர்பார்த்து, பையை திறந்து பார்த்த திருடர்கள், அதில் இருந்த தக்காளி பழங்களை பார்த்து டென்சன் ஆனார்களோ, அல்லது போகிற வழியில் தக்காளியை விற்றுவிட்டு சென்றார்களோ தெரியவில்லை, தக்காளி பையை திருடுவதற்காக காரில், வீச்சரிவாளோடு வந்த 3 பேருக்கும், கிடைத்த தக்காளி விலை கட்டுப்படியானதா, இல்லையா என தெரியவில்லையே, என்றும் பலரும் கேலி பேசி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu