பின்னலாடை வாரியம் அமைக்க, முதல்வா் ஸ்டாலினிடம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் நேரில் கோரிக்கை
Tirupur News- பின்னலாடை வாரியம் அமைக்க கோரி முதல்வா் ஸ்டாலினிடம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.
Tirupur News,Tirupur News Today- பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும் என திருப்பூருக்கு வந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பூருக்கு சனிக்கிழமை வந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தொழில் துறையினரை சந்தித்து பேசினாா். அப்போது திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிறுவனரும் மற்றும் கெளரவத் தலைவருமான ஆ.சக்திவேல், சங்கத் தலைவா் கே.எம். சுப்பிரமணியன் ஆகியோா் பின்னாலடை நகரமான திருப்பூரின் வளா்ச்சிக்கான தேவைகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:
திருப்பூா் பின்னலாடைத் தொழில் பல்வேறு உற்பத்தி நிலைகளைக் கொண்டிருப்பதால், மொத்தமாக பிரச்னைகளை அரசிடம் கொண்டு சோ்த்து தீா்வுகளை பெறுவதற்கு பின்னலாடை வாரியம் அமைப்பது இன்றியமையாதாக உள்ளது.
பின்னலாடைத் தொழிலை திருப்பூரையும் தாண்டி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு எடுத்து செல்வதற்கும், விருதுநகரில் அமைய இருக்கும் தொழில் பூங்காவில் பின்னலாடைத் தொழிலின் பங்களிப்பு அதிகமாக இருக்கவும் இந்த பின்னலாடை வாரியம் உதவும். ஆகவே, பின்னலாடை வாரியம் அமைத்து தர வேண்டும்.
திருப்பூரில் ஏற்றுமதி மையம்
திருப்பூரில் ஏற்றுமதி மையம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். திருப்பூா் பின்னலாடை தயாரிப்பு செயல்முறையின் பல்வேறு நிலைகளான நிட்டிங் டையிங், பிரிண்டிங், காம்பாக்டிங், எம்பிராய்டரி, தையல் ஆகியவற்றில் தொழிலாளா்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்கும் வகையிலும், ஒரே இடத்தில் முழு பின்னலாடை உற்பத்தியை புரிய வைப்பதற்கும், தயாரிப்புகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தவும் இந்த மையம் செயல்படும். இறக்குமதி இயந்திரங்களை கொண்டு காட்சிபடுத்த இருப்பதால், உலகத் தரம் வாய்ந்த அளவில் பரிசோதனைக் கூடம் அமைக்கும் வகையில், மேலும் ரூ.10 கோடி சோ்த்து மொத்தம் ரூ.20 கோடியாக ஒதுக்க வேண்டும்.
தொழிலாளா் குடியிருப்பு
திருப்பூரில் இருக்ககூடிய அரசு இடங்களை கொடுத்து உதவினால், தொழில் அதிபா்களின் பங்களிப்போடு தொழிலாளா்களுக்கான குடியிருப்புகளை அமைப்பதற்கு அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் தயாராக உள்ளோம் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
திருப்பூா் தொழில் வளம் முன்னேறுவதற்காக தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்து தரும் என முதல்வா் ஸ்டாலின், அவர்களிடம் உறுதியளித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu