மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
Tirupur News- திருப்பூரில் மழைவேண்டி பிரார்த்தனை செய்ய அழைப்பு (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- மழை வேண்டி, சித்திரை அமாவாசை தினத்தில்(மே 7) கோவில்களில் ஒன்றிணைந்து இறைவனை வழிபடுவோம், என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அக்னி நட்சத்திர காலமான, 30 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதில், முதல் பதினைந்து நாட்கள் முடிகின்ற போதே கோடை மழை பெய்து, அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். ஆனால், இந்தாண்டு அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க துவங்கி விட்டது.
பயிர்கள் காய்ந்ததால் கவலையுறும் விவசாயிகள்; வனத்தில் அருவிகள், ஆறுகள் வறண்டதால் தண்ணீர் தேடி அலைந்திடும் விலங்குகள்; அணையில் போதிய நீர் இல்லாததால் மின் உற்பத்தி நிறுத்தம்; வாரத்துக்கு, மாதத்துக்கு ஒருமுறை மக்களுக்கு குடிநீர் வினியோகம் போன்றவற்றை பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. இதற்கெல்லாம், ஒற்றை தீர்வு மழை மட்டுமே; வேறு வழி இல்லை.
மேற்கத்திய நாடுகள் போல் அறிவியல் பூர்வமாக செயற்கை மழையை உருவாக்க முடியும் என்றாலும், இறையம்சமான இயற்கை அன்னைக்கு ஈடு இணை இல்லை என்பதால் ஆட்சியாளர்களை கேள்வி கேட்பதை விட, இறைவனைக் கேட்பது சாலச்சிறந்ததாக இருக்கும்.
சித்திரை அமாவாசையன்று(மே 7ம் தேதி) அனைத்து மக்களும் தங்கள் இஷ்ட தெய்வம், குல தெய்வம், முன்னோர்களை நினைத்து நமது பகுதியில் உள்ள அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ, மழை மும்மாரி பொழிந்திட இறைவனை ஒன்று சேர்ந்து வேண்டுவோம். பக்தியால் இறைவனை குளிர்வித்தால், நம் மண்ணை குளிர்விப்பார் என்ற நம்பிக்கையுடன் இறைவனை வழிபடுவோம்; மழை பெறுவோம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu