கொசுவலை போர்த்தி வந்து முறையிட்ட கவுன்சிலர்; திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில் ‘காமெடி’
Tirupur News- திருமுருகன் பூண்டி கூட்டத்தில் கொசுவலை போர்த்திக்கொண்டு கோரிக்கை வைத்த கவுன்சிலர்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்ற நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் ஆண்டவன் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர்களின் விவாதம்
தங்கவேலு (அ.தி.மு.க.,): 16வது வார்டு பகுதிகளில் அதிகமான கொசுக்கள் இருப்பதால், மருந்து அடிக்க கோரி மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. (தான் கொண்டு வந்திருந்த கொசுவலையை போர்த்திக் கொண்டு நுாதன முறையில் முறையிட்டார்)
மதிவாணன் (தி.மு.க.,): 'மக்களிடம் முதல்வர்' திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து ஆணையரிடம் கேட்க சென்ற போது, 'அனுமதி இல்லாமல் வரக்கூடாது,' என்று கூறி, தீண்டத்தகாதவனைப் போல நடத்தினார். நடந்த சம்பவத்திற்கு ஆணையர் வருத்தம் தெரிவித்துள்ளார். கவுன்சிலர்களை மரியாதை குறைவாக இனி வரும் காலங்களில் ஆணையர் நடத்தக்கூடாது.
கார்த்திகேயன் (அ.தி.மு.க.,): 3வது வார்டு, அழகாபுரி, சொர்ணபுரி நகர் பகுதியில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். வி.ஜி.வி., கார்டன் பகுதியில் பாலம் அமைக்கும் பணியை உடனடியாக முடித்து தர வேண்டும்.
பாரதி (தி.மு.க.,): அனைத்து வார்டிலும் தெரு நாய் தொல்லை அதிகம். ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகசாமி (தி.மு.க.,): 7வது வார்டு பெரியாயிபாளையம் ரோட்டில் வண்டி பாதை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டடங்கள் அகற்ற வேண்டும். பழைய போலீஸ் ஸ்டேஷன் இருந்த இடத்தை மருத்துவ மனைக்குப் பயன்படுத்த வேண்டும்.
ராஜன் (தி.மு.க.,): குடிநீர் வந்து, 25 நாள் ஆகிவிட்டது. சாக்கடை எடுக்க வருவதில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் புழுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கதிர்வேல் (இ. கம்யூ.,): - அம்மாபாளையம், ராக்கியாபாளையம், தேவராயம் பாளையம், உமையஞ்செட்டி பாளையம் ஆகிய பகுதிகளில் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே எல் அண்ட் டி தண்ணீர் வருகிறது. இது மக்கள் குடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.
குமார் (நகராட்சி தலைவர்): 2ம் கூட்டு குடிநீர் திட்டத்தில், நகராட்சிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. எல் அண்ட் டி தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. 'அம்ருத்' திட்டத்தில் தண்ணீர் சப்ளை கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் 27 வார்டு கவுன்சிலர்களும் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu