அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள் சேதம், வேல்கள் திருட்டு; கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது
Tirupur News. Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சேதப்படுத்தப்பட்ட சுவாமி சிலைகள்.
Tirupur News. Tirupur News Today- அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் கலசங்களை உடைத்து, முருகன் சன்னதியில் இருந்த வேல்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பெருங்கருணைநாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நூற்றாண்டுகளை கடந்த பல அரிய சிற்பங்கள் உள்ளன. தினமும் 3 கால பூஜை நடக்கிறது. இக்கோவிலில் சமீபத்தில்தான் சித்திைர திருநாள் தேரோட்டம் விழா நடந்து முடிந்தது.
இந்நிலையில், கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை 4 மணிக்கு பூஜை செய்ய சிவாச்சாரியார் கோவிலின் பிரதான கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது 63 நாயன்மார்கள் சிலைகள் மீது உடுத்தப்பட்டிருந்த வஸ்திரங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அந்த சிலைகள் அருகே சிமெண்டால் செய்யப்பட்டிருந்த கலசங்கள் உடைந்து கிடந்தது. மேலும் 2 உண்டியல்களிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. உண்டியலை உடைக்க முடியாததால் காணிக்கை பணம் பத்திரமாக உள்ளது. மேலும் முருகன் சன்னதியில் இருந்த வெண்கலத்தால் ஆன ஒரு வேல், சேவல் கொடியுள்ள 2 வேல் மற்றும் சிறிய பொருட்களைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவாச்சாரியார் கோவிலின் நிர்வாகிகளுக்கும், அவிநாசி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அவிநாசி டிஎஸ்பி பவுல்ராஜ் தலைமையில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். கோவிலின் பிரதான கதவை உடைக்காமல், கொள்ளையன் உள்ளே புகுந்தது எப்படி என்று போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து, உண்டியலை உடைக்க முயற்சி செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் உண்டியலை உடைக்க முடியாததால், நேராக 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பகுதிக்கு சென்று, அங்கு ஒவ்வொரு 4 நாயன்மார்கள் சிலைக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டால் ஆன கலசத்தை உடைக்கிறார். கடைசியில் பிரதான கோபுர வாசல் பகுதிக்கு வந்து நிற்பதும், கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
எனவே கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கோவிலில் இருந்து தப்பி செல்ல வாய்ப்பு இல்லை என்றும், கோவிலுக்குள்தான் பதுங்கி இருக்க வேண்டும் என்று யூகித்த போலீசார் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் சென்று தேடினர். அப்போது பிரதான கோபுரத்தின் 3-வது நிலையில் அந்த வாலிபர் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் பதுங்கி இருந்தார். அவர் கழுத்தில் மாலை அணிந்து இருந்தார். உடனே அந்த நபரை கீழே அழைத்து வந்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சேவூர் அருகே சாவக்கட்டுபாளையம் வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவணபாரதி (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 வேல்கள் மற்றும் பூஜை உபகார பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறப்பு மிக்க அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வாலிபர் புகுந்து கலசங்களை உடைத்து, திருடிய சம்பவம் அவிநாசி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu