கொப்பரை ஆதரவு விலை கிலோ ரூ.3 உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

கொப்பரை ஆதரவு விலை கிலோ ரூ.3 உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
X

Tirupur News- உலர்களத்தில் கொப்பரை  (கோப்பு படம்)

Tirupur News-கொப்பரை ஆதரவு விலை கிலோ ரூ.3 உயர்கிறது. இதனால் விவசாயிகள் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today -பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2024ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, அரவை கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு, 11,160 ரூபாய் ஆகவும், அரவைக்கு முந்தைய கொப்பரை குவின்டாலுக்கு, 12 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அரவை கொப்பரைக்கு, 51.84 சதவீதம், அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு, 63.26 சதவீதம் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழுப்பலன் கிடைப்பதில்லை

ஈசன் முருகசாமி, நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்:

கொப்பரை வணிகத்தில் லாபம் ஈட்ட, உலர்கலங்கள் அவசியம்; பெரிய விவசாயியால் கூட, கலம் அமைத்து, பராமரிப்பது கடினம். விவசாயிகள், கொப்பரையை கலம் வைத்து, அவற்றை உலர்த்தி, விற்பனை செய்து கொடுக்கும் பணியை தொழிலாக கொண்டுள்ள வியாபாரிகளிடம் வழங்கி விடுகின்றனர். இதனால், அரசின் கொள்முதல் விலை, முழுவதுமாக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை; மாறாக, வியாபாரிகளுக்கே லாபம். கேரளா போன்று, அரசே தேங்காயை நேரடியாக வாங்கி, எண்ணெய் தயாரித்து சந்தைப்படுத்தினால் தவிர, விவசாயிகள் லாபம் பெற முடியாது

வியாபாரிகளுக்கே பயன்

மதுசூதனன், மாநில தலைவர், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம்:

கொப்பரை கொள்முதல் விலையை 108.60 ரூபாயில் இருந்து, 3 ரூபாய் உயர்த்தி, 111.60 பைசாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொப்பரைக்கு, 140 ரூபாய் விலை வேண்டும் என்பதுதான், விவசாயிகளின் எதிர்பார்ப்பு. காரணம், பெரும்பாலான விவசாயிகளுக்கு உலர்கலன் இல்லை. இதனால், வியாபாரிகளே அதிகம் பயன் பெறுகின்றனர். முழு வரி விலக்கு அளிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்கு, வரி விதிக்க வேண்டும். இதனால், உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும்; தென்னை விவசாயம் செழிக்கும்.

கொள்முதல் காலம் நீடிப்பு

சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர், களஞ்சியம் விவசாயிகள் சங்கம்:

கொப்பரைக்கான விலை உயர்வு என்பது, விவசாயிகளுக்கு ஓரளவு பலன் அளிக்கும். கொப்பரை கொள்முதல் காலத்தை, நீட்டிக்க வேண்டும். மத்திய அரசே தேங்காயை கொள்முதல் செய்து, தேங்காய் எண்ணெய் தயரித்து, சந்தைப்படுத்த வேண்டும். கொப்பரை மட்டுமின்றி, எண்ணெய் சார்ந்த நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர் சாகுபடியிலும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2024 -ம் ஆண்டுக்கான பருவ கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவின்டாலுக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி

தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக கொப்பரைக் கொள்முதல் விலை உயர்வு இருந்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம் இந்தியா முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் பட்சத்தில் மாநில அரசும் இணைந்து செயல்படுவார்கள் எனவும் இதனால் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார். ஒரு தரப்பு இந்த ஆதார விலை உயர்வால் பெரிய பயன் கிடைக்காது என்ற கூறிய நிலையில், ஒரு தரப்பினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!