தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை; திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
Tirupur News- அமராவதி அணை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளில் தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து பிப்ரவரி 1-ம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், மின் மோட்டாா்கள் மற்றும் டீசல் என்ஜின்கள் மூலம் பல பகுதிகளில் தண்ணீா் திருட்டு நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அமராவதி பழைய, புதிய பாசனப் பகுதிகளில் தண்ணீா் திருட்டில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் நீா் வளத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, காவல் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் ஆகிய துறை அலுவலா்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு அமராவதி வாய்க்கால்களில் ஆய்வு செய்யும். மேலும், தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு
குழந்தைகள் நலக்குழு தலைவா், உறுப்பினா்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தை நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இதில், விண்ணப்பிக்க குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
மேலும், குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 35 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். இதற்காக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 7 ஆவது தளத்தில் அறை எண் 705-இல் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பங்களைப் பெற்று 15 நாள்களுக்குள் பூா்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநா், சமூக பாதுகாப்புத் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை- 600010.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu