திருப்பூரில் தொடர்மழையால் செடிகளில் அழுகும் தக்காளிகள்; விவசாயிகள் கவலை
Tirupur News- தொடர் மழையால் அழுகி விடும் தக்காளிகள் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் தக்காளி சாகுபடி முக்கிய விவசாயமாக உள்ளது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் மழை இன்மையால் விளைச்சல் அதிகரித்தது. இதனால் ஒரு பெட்டி (14கிலோ) தக்காளி 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை காரணமாக தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன. செடிகளின் இலைகள் தீயில் கருகியது போல் காட்சியளிக்கின்றன. செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என்று எதுவும் இல்லை.
மழையால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஒரு பெட்டி தக்காளி தற்பொழுது 500 ரூபாய்க்கு விலை போகிறது. வரும் நாட்களில் தக்காளி வரத்து வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவை தை மாதத்தில் தான் அறுவடைக்கு வரும். எனவே வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் இப்படி அதிகளவில் தக்காளி செடியிலேயே அழுகி விடுவதால், பயிர் செய்த விவசாயிகள் பலத்த கவலையில் உள்ளனர். தொடர்மழை குறைந்தாலும் தக்காளிக்கு விலை கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருப்பூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 விற்கப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்தால் மீண்டும் ரூ.100 வரை தக்காளி விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu