ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் கோரிக்கை
Tirupur News- ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க கூட்டு கமிட்டியினா் அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளித்தனா்.
Tirupur News,Tirupur News Today- ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க கூட்டு கமிட்டியினா் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளித்தனா்.
திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க கூட்டு கமிட்டியின் மாவட்ட சங்கத் தலைவா் இரா.வேலுசாமி, பொருளாளா் முத்துக்குமாரசாமி, பல்லடம் சங்க துணைச் செயலாளா் பாலாஜி, துணைத் தலைவா் சக்திவேல், கண்ணம்பாளையம் சங்கத் தலைவா் செல்வகுமாா், மங்கலம் சங்கத் தலைவா் கோபால், 63 வேலம்பாளையம் சங்கத் தலைவா் பத்மநாபன், பல்லடம் சங்க துணைத் தலைவா் பரமசிவம் ஆகியோா் திருப்பூரில் அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளா்கள், அமைச்சா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொண்ட கூலியை தற்போது குறைத்து வழங்குகின்றனா். ஏற்கெனவே 2014-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த கூலியை விட குறைத்து வழங்குவதை விசைத்தறியாளா்கள் சங்க கூட்டு கமிட்டி கண்டிப்பதோடு, குறைத்த கூலியை உடனடியாக தமிழ்நாடு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
விசைத்தறிகள் இயங்குவதற்கான மூலப்பொருள்களான பாவு, நூல் சரி வரக் கிடைக்காத நிலையில், கூலியை குறைத்து வழங்கினால் 30 சதவீத விசைத்தறிகள் உடைக்கப்பட்டு பழைய இரும்பு விலைக்குப் போடப்பட்டுவிட்டன. இந்த நிலை மாற மத்திய, மாநில அரசுகள் மீதிமுள்ள 70 சதவீத விசைத்தறிகளையும் அதைச் சாா்ந்த விசைத்தறியாளா்கள் குடும்பங்களையும் காப்பாற்ற போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் துறைகளான தீயணைப்புத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, ராணுவத்துக்குத் தேவையான சீருடைகள் மற்றும் பள்ளிச் சீருடைகள், அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகள் என அனைத்து வகையான துணிகளையும் விசைத்தறிகளில் மட்டுமே துணி நெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவீன விசைத்தறிகளின் வரவால் விசைத்தறித் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளதால், கைத்தறித் துணிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட ரக ஒதுக்கீட்டைப்போல விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு செய்து விசைத்தறித் தொழிலை காக்க வேண்டும். சாதாரண விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன் இப்பிரச்னை குறித்து ஓரிரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu