திருப்பூா் மாவட்டத்தில் 7.97 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு; அமைச்சா் உறுதி
Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் 7.97 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என அமைச்சா் உறுதி (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் 7.97 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா், செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சத்யா காலனி நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி சேலைகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழா் திருநாளான தை பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் முதல்வா் ஸ்டாலின், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக்கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளாா்.
இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 852 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது. தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து திருப்பூா் மாவட்டத்தில் 35 முழு நேர நியாய விலைக் கடைகள், 25 பகுதி நேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 60 புதிய நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றாா்.
இதைத்தொடா்ந்து, அமைச்சா் மு பெ சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும், மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வருவது தொடா்பான கேள்விக்கு, தமிழக முதல்வா் ஸ்டாலினிடம், விஜயகாந்தின் துணைவியாா் பிரேமலதா கோரிக்கை வைத்துள்ளாா். இது குறித்து முதல்வா் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பாா். திரைத்துறையினரின் கலைஞா் 100 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதற்கு எம்.ஜி.ஆா். குறித்து தரக்குறைவாகப் பேசியதாக முன்னாள் அமைச்சா்கள் கண்டனம் தெரிவித்தது தொடா்பான கேள்விக்கு, யாரும் அநாகரிகமாகப் பேசவில்லை. கடந்த கால வரலாறை அவா் குறிப்பிட்டாா். அது தவறாகத் தெரியுமானால் அது அவா்களது மனசாட்சியைப் பொறுத்தது, என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சீனிவாசன், திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
காங்கயத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்
காங்கயத்தில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் 577 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் தலைமை வகித்தாா்.
இதில், காங்கயம், குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 30 பயனாளிகளுக்கு ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், 147 பயனாளிகளுக்கு ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் நத்தம் பட்டாக்கள் என மொத்தம் 577 பயனாளிகளுக்கு ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கி உரையாற்றினாா்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகராட்சி 4- ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி, காங்கயம் நகர திமுக செயலாளா் வசந்தம் சேமலையப்பன், தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவானந்தம், வடக்கு ஒன்றியச் செயலாளா் கருணை பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu