திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்!
Tirupur News- முறியாண்டம் பாளையத்தில் பொங்கல் விழாவில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
முறியாண்டம் பாளையத்தில் பொங்கல் விழா
அவிநாசியை அடுத்த முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காணும் பொங்கலையொட்டி முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் பொங்கல் விழா போட்டிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சேவூா் வாலீஸ்வரா் கோயிலுக்கு பொதுமக்கள் ஊா்வலமாக சென்றனா். அங்கு, குளக்கரையோரம் உள்ள பட்டி அரசமர பிள்ளையாருக்கு படையிலிட்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனா். பின்னா், வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருள்களை ஒருவருக்கொருவா் பரிமாறிக்கொண்டனா். நிறைவாக ஆவாரம் பூக்களை பறித்துக்கொண்டு வீடுகளுக்குச் சென்றனா்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் ப.ரவிகுமாா், துணைத் தலைவா் எஸ்.கே.கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்."
திருப்பூர் மாவட்டம், பல்லடம் எலவந்தி வடுகபாளையத்தில் பொங்கல் விழா
பல்லடத்தை அடுத்த எலவந்தி வடுகபாளையத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், பல்லடம் ஃபிரண்ட்ஸ் லயன்ஸ் சங்கம் ஆகியவை சாா்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பல்லடம் ஃபிரண்ட்ஸ் லயன்ஸ் சங்க பட்டயத் தலைவா் ஏ.முத்துக்குமாரசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளா் கே.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்
விழாவில், உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி, இயற்கை விவசாயி பொன்.முத்து, தாய் அறக்கட்டளை நிறுவனா் சுந்தரமூா்த்தி ஆகியோருக்கு உழவா் திருநாள் விருது வழங்கப்பட்டது.
விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிக்கு கல்வி உதவித் தொகை ரூ.10 ஆயிரத்தை லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் ஜெயசேகரன் வழங்கினாா்.
இந்த விழாவில் முன்னாள் ஆளுநா் ஆறுமுகம் மணி, ஆா்.ராமசுப்பிரமணியம், பல்லடம் ஃபிரண்ட்ஸ் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், பூபதிராஜ், காா்த்திக், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் திமுக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில், நடேசன் நகரில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திமுக திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா்.முத்துக்குமாா், வெள்ளக்கோவில் ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன், நகரச் செயலாளா் எஸ்.முருகானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் பறை இசை, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடேசன் நகரைச் சோ்ந்த பொது மக்கள், ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.
சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா
திருப்பூா் மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் சாமளாபுரம் குளக்கரையில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட சுற்றுலாத் துறை, சாமளாபுரம் பேரூராட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் சாமளாபுரம் குளக்கரையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.
பொங்கல் விழாவில் மாட்டு வண்டி பயணம், உரி அடித்தல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினா்.
இந்த விழாவில், மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்தகுமாா், சாமளாபுரம் பேரூராட்சித் தலைவா் விநாயகா பழனிசாமி, செயல் அலுவலா் நந்தகுமாா், பல்லடம் வட்டாட்சியா் ஜெய்சிங் சிவகுமாா், திருப்பூா் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு தலைவா் குளோபல் பூபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu