திருப்பூர்; வரி இனங்களை செலுத்துவதில் மக்கள் தாமதம்; நூதன முறையை ஆலோசிக்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள்

Tirupur News,Tirupur News Today- வரியினங்கள் வசூலை துரித்தப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் யோசனை. (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளின் பிரதான வருவாய் சொத்து வரி, குடிநீர் வரி ,தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் மூலமே வசூலிக்கப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆண்டுதோறும்100 சதவீதம் வரி வசூலிக்க வேண்டும் என அரசும் உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு சொத்து வரி மறு சீராய்வு செய்யப்பட்டு உயர்த்தப்பட்ட வரி தொகை வசூலிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்துக்குள் சொத்து வரி செலுத்தும் கட்டட உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்ற சலுகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. தள்ளுபடி சலுகையில் வரி செலுத்தியவர்கள் வெறும் 5 முதல் 10 சதவீதம் பேர் மட்டுமே என உள்ளாட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உள்ளாட்சி அலுவலர்கள் கூறியதாவது,
நகர்புற உள்ளாட்சிகளில் வரி செலுத்தும் முறை மிக எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை முறையில் வரி தொகை செலுத்திக் கொள்ள முடியும். நடமாடும் மொபைல் வாகனம் வாயிலாகவும் வரி வசூலிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கூட வரி செலுத்திக் கொள்ள முடியும். இருப்பினும் வரி செலுத்துவதில் மக்கள் முழு ஆர்வம் காட்டாமல் உள்ளதால் பல உள்ளாட்சி நிர்வாகங்களில் பெரும் தொகை நிலுவையில் உள்ளது. நிதி நெருக்கடியில் திணற வேண்டியிருக்கிறது. வருமானம் குறைவாக உள்ள உள்ளாட்சிகளில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே வீடுகள், வணிக நிறுவனம், கடைகள் ,தொழில் நிறுவன உரிமையாளர்களின் மின் இணைப்பு எண்ணுடன் வீட்டு வரி எண் இணைக்க வேண்டும். ஆண்டு இறுதியில் மார்ச் 31க்குள் சொத்து வரி ,குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை செலுத்தாத கட்டட உரிமையாளர்களுக்கு சொந்தமான கட்டடங்களில் மின் இணைப்பு துண்டிக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்தால் அனைவரும் குறித்த தேதிக்குள் வரி செலுத்தி விடுவர்.இதன் வாயிலாக உள்ளாட்சி நிர்வாகங்களும் 100 சதவீதம் வரி வசூலிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu