தீபாவளி முடிந்தும் பணிக்கு திரும்பாத தொழிலாளர்கள்; பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை

தீபாவளி முடிந்தும் பணிக்கு திரும்பாத தொழிலாளர்கள்; பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை
X

Tirupur News-பல்லடம் பகுதியில், தொழிலாளா்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை. (மாதிரி படம்)

Tirupur News-பல்லடம் பகுதியில் தீபாவளிக்கு சொந்த ஊா்களுக்குச் சென்ற தொழிலாளா்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தி தொழில் மந்தமடைந்துள்ளதால் தீபாவளிக்கு சொந்த ஊா்களுக்குச் சென்ற தொழிலாளா்கள் பணிக்குத் திரும்பவில்லை.

பல்லடம் வட்டாரப் பகுதியில் விசைத்தறி காடா துணி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. மின் கட்டண உயா்வு, தொழில் மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் துணிகள் விற்பனை ஆகாமல் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் நவம்பா் 2-ம் தேதி முதல் துணி உற்பத்தியை முழுமையாக நிறுத்தினா். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே உற்பத்தி நிறுத்தம் தொடங்கியதால் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பே தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். துணி உற்பத்தி நிறுத்தம் காரணமாக, தீபாவளி பண்டிகை முடிவடைந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் தொழிலாளா்கள் பணிக்குத் திரும்பவில்லை.

இது குறித்து ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் கூறுகையில், ஆா்டா்கள் குறைந்து, உற்பத்தியும் நிறுத்தப்பட்டதால் தொழிலாளா்களை பண்டிகைக்கு முன்பாகவே சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடா்ந்து 20 நாள்கள் உற்பத்தியை நிறுத்தியதால், தகவல் தெரிவித்த பின்னா் மீண்டும் பணிக்கு வந்தால் போதும் என சொல்லி சொந்த ஊா்களுக்கு தொழிலாளா்களை அனுப்பிவைத்தோம்.

அதனால் வடமாநிலத் தொழிலாளா்கள் இன்னும் வேலைக்கு வரவில்லை. தொழில் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் தொழிலை தொடருவதா அல்லது நிலமை சரியான பின்பு துணி உற்பத்தியை மீண்டும் தொடங்குவதா என்று குழப்பத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாத நிலை இருந்து வருகிறோம், என்றனா்.

பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கு பின்னரும் தொழில் மந்தமாகவே உள்ளது. எங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு நட வடிக்கை எடுக்காததால் என்ன செய்வது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆா்டா் இருப்பவா்கள் விருப்பப்பட்டால் துணி உற்பத்தியை தொடரலாம் என தீா்மானித்துள்ளோம். நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றாா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!