கோர்ட் வளாகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி; பல்லடத்தில் பரபரப்பு
கோர்ட் வளாகத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட கருப்பசாமி ( கோப்பு படம்)
திருட்டு வழக்கில் தண்டனை கிடைக்கும் என்ற பீதியில் பல்லடம் கோர்ட் வளாகத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது மனைவியும் பிளேடால் கையை கிழித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் கருப்பசாமி (வயது 29). இவருடைய மனைவி மஞ்சுளா. இ்ந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி, தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு, பணிக்கம்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டன்பாளைத்தில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நிபந்தனை ஜாமீனில் கருப்பசாமி சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் மீதான திருட்டு வழக்கு விசாரணை பல்லடம் கோர்ட்டில் நடந்து வந்தது. ஆனால் ஜாமீனில் வந்த கருப்பசாமி தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதனால் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கருப்பசாமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கருப்பசாமியை, போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது கருப்பசாமி கோர்ட் வளாகத்தில் கிடந்த சிறிய கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் கழுத்து பகுதியில் ரத்தம் வெளியேறியது. இதனை கண்ட போலீசார், கருப்பசாமியை தடுத்து, சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே கணவர் தற்கொலைக்கு முயன்றதை கண்ட அவரது மனைவி மஞ்சுளாவும் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரையும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கருப்பசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருட்டு வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், கருப்பசாமி கோர்ட் வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பல்லடம் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோர்ட் வளாகத்தில் போலீசார், வக்கீல்கள், பொதுமக்கள் காணப்பட்ட நிலையில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளியும், அவரது மனைவியும் திடீரென தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்பகுதியில் பதட்டத்தை, ஏற்படுத்தியது. இதனால், இருவரது மீதும் வழக்குப்பதிவு செய்ததால், ஒரு வழக்குக்கு பயந்த இந்த தம்பதி, மேலும் கூடுதலாக தற்கொலை முயற்சி என்ற வழக்கை தாமாக உருவாக்கி கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu