பல்லடம் அருகே வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
வெட்டி சாய்க்கப்பட்ட பனைமரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லடம் அருகே வெட்டி சாய்க்கப்பட்ட பனைமரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரை சேர்ந்தவர் வடிவேல், (வயது42)விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே, 80 ஆண்டுகள் பழமையான பனை மரங்கள் இருந்தன. இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே வழித்தட பிரச்சினையை தொடர்ந்து, 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்கப்பட்டன. இது குறித்து வடிவேல் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வடிவேல் மற்றும் இவரது உறவினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் ஒப்பாரி வைத்தனர். 'மண்ணைக் காக்கும் பனை மரங்களை அழிக்காதே', 'பனை மரத்துக்கு அஞ்சலி' என்பது உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகையில், '80 ஆண்டுகளாக இருந்த பனை மரங்களை, வழித்தட பிரச்சினைக்காக வெட்டி வீழ்த்தியுள்ளனர். இன்றைய சூழலில், பெற்ற குழந்தைகள் போல் மரங்களை வளர்க்க வேண்டியுள்ளது. வெட்ட ப்பட்ட பனை மரங்களுக்கு இணையாக மரங்கள் நட வேண்டும். மரங்களை வெட்டியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது என்றனர்.
பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன் உள்ளதாகும். பதநீர், கருப்பட்டி, நுங்கு, பனம்பழம் என உணவாக பயன்படுகிறது. பனை ஓலை பாய் முடைவதற்கும், பனங்கட்டைகள் வீடு கட்டுவதற்கும், பனை நார் மற்றும் தும்பு ஆகியவை வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுகிறது. பனை மரத்தின் பயன்கள் அறிந்து தற்போது அதனை எல்லா இடங்களிலும் வளர்க்கும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பனை மரங்கள் வெட்டப்பட்டது அதனை வளர்த்தவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu