மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்; சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய மக்கள்

மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்; சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய மக்கள்
X

Tirupur News- சீர்வரிசை தட்டுகளுடன் வந்த இஸ்லாமிய மக்கள்.

Tirupur News- மத நல்லிணக்கத்தை, மனிதகுல ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில், இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை வழங்கினர்.

Tirupur News,Tirupur News Today - பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி, ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது.

கோவில் திருப்பணிகள் முடிவுற்று இன்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

இந்தநிலையில் அங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள், மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமாக வந்த இஸ்லாமிய மக்களை, மகாகணபதி கோவில் முன்பு அவர்களை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அங்கிருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது,

பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. மதங்களை கடந்து மனித நேயத்தை தொடர்ந்து போற்றி வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்து, இஸ்லாமியம், கிறிஸ்தவம், சீக்கியம் என மதங்கள் பல வேறுபட்டதாக இருந்தாலும் அனைவரது மதங்களும் போதிப்பது அன்பையும், சமத்துவத்தையும்தான். மனிதர்கள் ஒற்றுமையாக வாழ்வதும், ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பதும், வாழும் காலத்தில் அன்பை பரிமாறிக்கொள்வதுமே இங்கு மிக முக்கியமானது. மதங்களின் பெயரால், மனிதர்கள் வேறுபட்டு நிற்பதை எந்த கடவுளும் விரும்புவதில்லை. அதை உணர்த்தும் ஒரு நெகிழ்வான நிகழ்வாக, பல்லடத்தில் மகா கணபதி கோவில் கும்பாபிஷேகத்தில், சீர்வரிசை தட்டு தந்து இஸ்லாமிய மக்கள் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!