குட்டையில் அள்ளப்பட்ட மண்: லாரியை சிறைபிடித்த மக்கள்
பல்லடத்தில், குட்டையிலிருந்து மண் எடுத்த லாரிகளை மக்கள் சிறைபிடித்தனர்.
பல்லடம், பொள்ளாச்சி சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதற்காக, சின்ன வடுகபாளையம் குட்டையில் இருந்து மண் எடுக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குட்டையில் இருந்து மண் எடுக்கக்கூடாது எனக்கூறி, பொதுமக்கள் மண் எடுக்க வந்த வாகனங்களை சிறைபிடித்தனர்.
இதையடுத்து, லாரிகளில் இருந்த மண் மீண்டும் குட்டையில் கொட்டப்பட்டது. நேற்று, மீண்டும் மண் அள்ளும் பணி நடந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஐந்து லாரிகள் மற்றும் இரண்டு பொக்லைன் வாகனங்களை சிறை பிடித்தனர்.
மக்கள் கூறுகையில், ' சாலை விரிவாக்கப்பணி என்ற பெயரில், நுாற்றுக்கணக்கான யூனிட் மண் கடத்தப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள உபரி மண்ணை மட்டும் தான் பயன்படுத்த ஆர்.டி.ஓ., அனுமதி வழங்கி உள்ளார். ஆனால், அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி, குட்டையில் இருந்து மண் அள்ளப்பட்டு வருகிறது,'' என்றனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற வட்டாட்சியர் தேவராஜ், பொதுமக்களிடம் விசாரித்தார். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை குட்டையில் மண் இருந்து எடுத்ததற்கு தண்டனையாக, குட்டையை துார்வாரி தர வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரும் இதை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. இச்சம்பவத்தால், பல்லடம்–பொள்ளாச்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu