விசைத்தறி தொழில் பிரச்சினைகள் குறித்து, வாக்குறுதி அளிக்காத அரசியல் கட்சிகள்

விசைத்தறி தொழில் பிரச்சினைகள் குறித்து, வாக்குறுதி அளிக்காத அரசியல் கட்சிகள்
X

Tirupur News- விசைத்தறியாளர்கள் ஏமாற்றம் (மாதிரி படம்)

Tirupur News- எந்த கட்சியுமே தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை என, விசைத்தறியாளர்கள் பலத்த ஏமாற்ற மடைந்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுச்சாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது,

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

விவசாயத்திற்கு அடுத்து அதிகப்படியான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரக் கூடியதாக விசைத்தறி ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் விசைத்தறி துணி உற்பத்தி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. விசைத்தறி ஜவுளி துணி உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 15 மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடை பெற்றாலும் அதிக அளவில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. காடா துணி உற்பத்தியை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை மாவட்டத்தில் சோமனூர் பகுதியிலும் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி ஜவுளித்தொழில் நலிவடைந்துள்ளது. நூல் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதி, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து போனது. இதனால் விசைத்தறி ஜவுளி தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசைத்தறி தொழிலுக்கு தேவையான பஞ்சு நூல் விலை உயர்வுக்கு தீர்வு, ரக ஒதுக்கீடு, ஜவுளி சந்தை அமைத்தல், விசைத்தறிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடமும் ஏற்கனவே வழங்கி உள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழில் சார்ந்த வாக்குறுதிகளும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எந்த கட்சியுமே தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. இதனால் ஏமாற்ற மடைந்துள்ளோம்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும்தான் பல்லடம் செயல்வீரர் கூட்டத்தில், விசைத்தறி தொழிலை பாதுகாப்பதாக பேசியுள்ளார். அவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்று வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!