வாடகைக்கு விடபட்ட குடோனில் விசைத்தறி விற்பனை செய்த உரிமையாளர் கைது
பல்லடத்தில், விசைத்தறி உரிமையாளருக்கு தெரியாமல் விற்பனை செய்யப்பட்ட விசைத்தறிகள், போலீசாரால் மீட்கப்பட்டன.
கோவை மாவட்டம், சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை அருகேயுள்ள வடவேடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (34). இவர், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம், கொடுவாய் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜோதிகாளிமுத்து (33) என்பவருக்கு சொந்தமான புதிய குடோன் கட்டிடத்தை கடந்த, 2021 ஜனவரி மாதத்தில் மாத வாடகையாக 50 ஆயிரம் ரூபாய் பேசி, டெபாசிட் தொகையாக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அந்த கட்டிடத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான, இறக்குமதி செய்யப்பட்ட 8 விசைத்தறிகளை வைத்து, தொழில் துவங்க பிரபு திட்டமிட்டு, அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த கட்டிடத்திற்கு புதிய மின் இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும், கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், விசைத்தறிகளை இயக்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இருப்பினும்,கட்டிட வாடகையை மாதம்தோறும், ஜோதி காளிமுத்துவின் வங்கிக் கணக்கிற்கு பிரபு செலுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் குடோனுக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த விசைத்தறிகளை காணவில்லை; கட்டிட உரிமையாளர் ஜோதி காளிமுத்துவிடம் கேட்ட போது கடன் பிரச்சனையால் விசைத்தறிகளை அடமானம் வைத்துள்ளதாக கூறி, அவற்றை மீட்டு ஒப்படைக்க அவகாசம் கேட்டுள்ளார். அவகாச காலம் முடிவுற்ற நிலையிலும், விசைத்தறிகளை மீட்டுத்தராததால், அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை செய்த போது, விசைத்தறிகளை அடமானம் வைக்காமல், பல்லடம் அருகே உள்ள ராசாகவுண்டம்பாளையம் சின்னத்தோட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு, 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஜோதிகாளிமுத்துவை கைது செய்த போலீசார், 8 விசைத்தறிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu