பல்லடம் நகராட்சி கூட்டம்; கவுன்சிலர் கையில் திருவோடு

பல்லடம் நகராட்சி கூட்டம்;  கவுன்சிலர் கையில் திருவோடு
X

பல்லடம் நகராட்சி கூட்டததில், கையில் திருவோடு ஏந்திய நிலையில் பாஜக கவுன்சிலர் சசிரேகா.

சொத்து வரி உயர்வைக் கண்டித்து, பல்லடம் நகராட்சி கூட்டத்திற்கு பாஜக கவுன்சிலர் சசிரேகா, கைகளில் திருவோடு ஏந்தி வந்தார்

பல்லடம் நகராட்சி சாதாரணக்கூட்டம் தலைவர் கவிதாமணி தலைமையில் நடந்தது. கமிஷனர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது

ராஜசேகரன் தி.மு.க.

தமிழக மக்களின் விரும்பத்தின் பேரில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சரவையில் இடம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கனகுமணி அ.தி.மு.க

ராயர்பாளையம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் சரிவர ஏறுவதில்லை. அதனால் அப்பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். ராயர்பாளையம், பனப்பாளையம் பகுதியில் உள்ள மினி உயர்மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை.

ருக்மணி தி.மு.க

தீர்மான பொருள் 2-ல் நகராட்சி வார்டு எண் 16 என்று பனப்பாளையம் பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது 8-வது வார்டு பகுதியில் உள்ளது. எந்தப்பகுதி, எந்த வார்டில் உள்ளது என்பது கூட நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியவில்லை. பனப்பாளையம் பகுதிகளில், தெரு விளக்குகள் எரிவதில்லை, குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.

சசிரேகா பா.ஜ.க

நகராட்சி சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பிச்சை எடுத்து செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பதை உணர்த்தவே மண் சட்டி எடுத்து வந்து இருப்பதாக கூறினார்.

இதற்கு தி.மு.க, காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க. ஆட்சியின் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று உரக்க சத்தமிட்டனர்

பாலகிருஷ்ணன் தி.மு.க

வரி இனங்கள் நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு, தினமும் சென்று வரி பணத்தை வரி வசூல் மையத்தில் செலுத்த பணியாளர்கள் சொல்வதால், மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கால அவகாசம் அளித்து வரி வசூல் செய்ய வேண்டும். இலக்கை எட்ட வரி வசூல் செய்யக்கூடாது.

கமிஷனர் விநாயகம்

நகராட்சி பகுதியில் 62 சதவீதம் சொத்து வரியும் மொத்தமாக 56 சதவீதம் அனைத்து வரி இனங்களும் நிலுவையில் உள்ளது. அதனால் தான் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

இக்கூட்டத்தில் 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த 18-வது வார்டு நகர் மன்ற பா.ஜ.க.உறுப்பினர் சசிரேகா கையில் திருவோடு ஏந்தியபடி வந்தார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில். 'நகராட்சியில் சொத்து வரி அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிச்சை எடுத்துத்தான் சொத்து வரி செலுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை தெரிவிக்கவே, திருவோடு ஏந்தி நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டேன்,' என்றார்.

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....