கொப்பரை கொள்முதல் மையம் துவக்கம்
பல்லடம், வாவிபாளையத்தில் கொப்பரை கொள்முதல் மையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், வாவிபாளையத்தில் உள்ள முத்தூர் களத்தில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மையம் துவக்க விழா நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கொப்பரை கொள்முதல் மையத்தை துவங்கி வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை வகித்தார்.
விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
பல்லடம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கமான வாவிபாளையத்தில் 1,000 டன் அளவு கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கொப்பரையை அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிலோ ரூ.105.90 என்ற விலையில். 6 சதவீதத்துக்குள் ஈரப்பதத்துடன் சீரான சராசரி தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயியிடம் இருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும்.
நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயியிடம் இருந்து 216 கிலோ கொப்பரை மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை 'சம்ரிதி' என்ற போர்டலில் பதிவு செய்ய வேளாண் விற்பனை சங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் பொங்கலூர், உடுமலை, காங்கயம் மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் கடந்த ஜூலை மாதம் வரை 4 ஆயிரத்து 284 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக 3 ஆயிரத்து 498 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கும் திட்டத்தில் ஒருவருக்கு கள உதவியாளர் பணிக்கான பணிநியமன உத்தரவை அமைச்சர் வழங்கினார். பின்னர் வே. கள்ளிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 89 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சீனிவாசன், பல்லடம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர் சுரேஷ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் குமார், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu