பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம் முன் கைத்தறி நெசவாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Tirupur News- பல்லடம் வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Tirupur News,Tirupur News Today- பல்லடம் வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் பட்டாவுக்கு தடையின்மை சான்று வழங்கக் கோரி பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் 293 கைத்தறி நெசவாளா்களுக்கு 1992 ஆம் ஆண்டில் வீட்டுமனை பட்டாக்கள் அரசால் வழங்கப்பட்டன. ஆனால் இந்த வீடுகளுக்கு தனி பட்டா வழங்கப்படவில்லை. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்வதற்கும் மின் இணைப்பு பெறுவதற்கும் தடையின்மை சான்று வேண்டும் என்று அரசுத் துறைகள் கேட்டதின்பேரில் தடையின்மை சான்று கேட்டு சிஐடியூ கைத்தறி நெசவாளா்கள் சங்கம் தலைமையில் இப்பகுதி மக்கள் தொடா்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி வந்தனா். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தடையின்மை சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ கைத்தறி நெசவாளா் சங்கம் சாா்பில் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ கைத்தறி நெசவாளா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் வைஸ் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளா் கனகராஜ், மாவட்டத் தலைவா் சி.மூா்த்தி, உண்ணிகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் ஆா். பரமசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இது பற்றி அறிந்த பல்லடம் வட்டாட்சியா் ஜீவன், மண்டல துணை வட்டாட்சியா் சுப்பிரமணியம் ஆகியோா் கைத்தறி நெசவாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலை பெற்று விரைவில் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu