மக்காச்சோளம் விலை உயர்வால், கறிக்கோழி விலை அதிகரிப்பு

மக்காச்சோளம் விலை உயர்வால், கறிக்கோழி விலை அதிகரிப்பு
X

மக்காச்சோளம் விலை உயர்வால், பல்லடத்தில் கறிக்கோழி விலை அதிகரித்துள்ளது.

மக்காச்சோளம் விலை உயர்வால், பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தி 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.

பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்றாக, கோழிப்பண்ணை தொழில் முக்கியமானதாக உள்ளது. கோழிப்பண்ணைகளில், முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி, இறைச்சிக்காக வளர்க்கப்படும் கறிக்கோழி என, இரண்டு வகைகள் உள்ளது. பல்லடம் பகுதியில் கறிக்கோழி வளர்ப்பு அதிகமாக உள்ளது.

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. தினமும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளா, கர்நாடகாவில் தொடர் மழையால் கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டது. மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால், அதன் விலையும் கடுமையாக சரிந்தது.

கடந்த மாதம் கறிக்கோழி கிலோ கொள்முதல் விலை ரூ.100 ஆக இருந்த நிலையில், சிலநாட்களுக்கு முன் ரூ.66 ஆக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ.90 வரை செலவாகும் நிலையில், விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கறிக்கோழி பண்ணையாளர்கள் 25 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்தனர். இதையடுத்து கறிக்கோழி கொள்முதல் விலை மெல்ல உயர்ந்து வருகிறது.

கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், சில வாரங்களாக மழை, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தீவன தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், கறிக்கோழி தொழில் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. கோழித்தீவனத்திற்கு மூல பொருளான மக்காச்சோளம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மக்காச்சோளம் விளைச்சல் குறைவானதால், வெளிமாநிலங்களில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆறு மாதத்திற்கு முன் ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கின் விலை தற்போது ரூ.70 ஆக விலை உயர்ந்துள்ளது. வேன், லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும், 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கறிக்கோழி தீவனமான சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவை மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தீவனங்கள் தொடர்ந்து விலை ஏறி வருவது கவலையளிக்கிறது. கோழி தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலையும் அதிகரிக்கிறது. கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. ரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன்முலம் கறிக்கோழி வளர்ப்பில் செலவுகளைக்கட்டுப்படுத்தி நஷ்டத்தை தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு , சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும், என்றனர்.

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil