பா.ஜ விரிக்கும் வலையில் விழுந்துடாதீங்க - கொமதேக ஈஸ்வரன் எச்சரிக்கை
Tirupur News,Tirupur News Today- பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறிய கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்பாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோர், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ., நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அந்தக் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த காவல்துறையினரின் பணி பாராட்டுக்குறியது. கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும். பொங்கலூர், காரணம்பேட்டை பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். அருள்புரம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
மத்திய அரசின் ஆணைக்கு இணங்க 10 நாளுக்கு ஒருமுறை தமிழ்நாடு கவர்னர் ஏதாவது ஒன்றை வைத்து குண்டு போடுகிறார். தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குவதில் பா.ஜ.க.வினர் தீவிரமாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் பா.ஜனதா விரிக்கும் வலையில் விழ வேண்டாம். சிறு, குறு, தொழில்களை மின் கட்டண உயர்வு, பீக் ஹவர் மின் கட்டணம் அழித்து வருகிறது. இவை இரண்டையும் தமிழக அரசு தவிர்த்து சலுகை வழங்கி அந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்த பின்னால் பாரதம் என பெயர் மாற்றம் செய்வது சந்தேகத்தை எழுப்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu