நுாற்றாண்டு பழமை வாய்ந்த உடுமலை நகராட்சி தலைவர் பதவி யாருக்கு?
பைல் படம்.
உடுமலை நகராட்சி, 1918 ஜன., 1ல், மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. அப்போதைய பழைய நகர பகுதி, கணக்கம்பாளையம் ஊராட்சி இணைத்து, நகராட்சியாக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, 1970ல், இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979ம் ஆண்டு, முதல் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல், தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 103 ஆண்டு பழமையான நகராட்சியாக உள்ளது.
முதலில், 7 வார்டுகளாக இருந்து, தற்போது, 33 வார்டுகளுடன் செயல்படுகிறது. குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரோடு வசதிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், துாய்மையான நகரம் என பெரும்பாலும் தன்னிறைவு பெற்ற நகராட்சியாகவும், பழமையான நகராட்சியாகவும் உள்ளது.
நீதிக்கட்சி, சுதந்திரா கட்சி, தி.க., ஆதரவு, ஜனதா தளம் என தலைவர்கள் இருந்த நிலையில், காங்., தலைவர்கள் அதிகளவில் பதவி வகித்துள்ளனர். தி.மு.க., வை சேர்ந்த தலைவர்களும் பல முறை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். த.மா.கா.,- பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., ஒரு முறைம் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. தற்போது, வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்களே, தலைவர் மற்றும் துணைத்தலைவராக மறைமுக தேர்தல் வாயிலாக, தேர்வு செய்யப்படுவர் என்பதால், ஆளும்கட்சியான தி.மு.க., வில், பலர் தலைவர் கனவுடன் வலம் வருகின்றனர்.
அ.தி.மு.க., விலும், தலைவர் பதவியை குறிவைத்து, காய் நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் அதிருப்தியடைந்தோர் சுயேட்சையாக பல வார்டுகளில் போட்டியிடுகின்றனர். போட்டி பலமாக உள்ளது. நகராட்சி உருவானது முதல், 33 வார்டுகளில், 166 பேர் என அதிகமான வேட்பாளர்கள் களத்தில் நிற்கும் தேர்தலாக தற்போதைய தேர்தல் அமைந்திருக்கிறது. சுயேட்சைகளின் ஆதிக்கமும் அதிகரித்து இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu