பல்லடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்

பல்லடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்
X

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ்

பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ்கள் சிக்கி தவிப்பது தொடர்கதையாகி உள்ளது.

பல்லடத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ரோட்டின் இரண்டு பக்கமும் தோண்டப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த வழியே செல்லும்போது வெளியேறும் மண் புழுதி வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. மேலும் சாலை குறுகலாக இருப்பதால், வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்வதால், எங்கு எப்போது விபத்து ஏற்படும் என்றே தெரியாத சூழல் உள்ளது. வெளியூர் வாகனங்களுக்கு இடையே சிக்கித்தவிக்கும் உள்ளூர் வாகன ஓட்டிகள், அன்றாடம் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர். கனரக வாகனங்கள் விதிமுறை மீறி உள்ளே நுழையாமல் இருப்பதையும் அவ்வப்போது கண்காணித்து வந்தனர். இதனால், பல்லடம் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட இந்த விதிமுறையால், வாகன ஓட்டிகள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.

ஆனால், கடந்த சில தினங்களாக இந்த விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டு, அனைத்து கனரக வாகனங்களும் வழக்கம்போல் பல்லடம் நகருக்குள் வரத் தொடங்கின. இதனால் கடந்த சில தினங்களாக கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சாலை விரிவாக்க பணியாலும், விதிமுறை மீறி கனரக வாகனங்கள் உள்ளே வருவதாலும், அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை, வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. இந்நிலையில், அந்த வழியே வரும் ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி தாமதமாகவே செல்கின்றன.

பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டியதே, தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தீர்க்க கனரக வாகனங்களை மீண்டும் நகரப்பகுதிக்குள் வராமல் மாற்றுப் பாதை வழியே திருப்பு விடுவதே தீர்வாகும் என பொதுமக்கள் கூறுகின்றனர்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!