பல்லடம் அருகே ஒட்டு ரக மக்காச்சோளம் சாகுபடி குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு
Tirupur News- மக்காச்சோளம் சாகுபடி குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- பல்லடம் சேடபாளையத்தில் விவசாயத் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஒட்டு ரக மக்காச்சோளம் சாகுபடி குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
பல்லடம் சுற்றுவட்டார பகுதிகள் பலவும் கிராமப்புறங்களாக காணப்படுகின்றன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், தட்டைபயிறு, பச்சை பயிறு, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி தோட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதுபோல் மக்காச்சோளம் சாகுபடியும் முக்கியமானதாக இருந்து வருகிறது. பல்லடத்தில் பல பகுதிகளில் விவசாய நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒட்டுரக மக்காச்சோளம் அதிகமான அளவில் சாகுபடி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பல்லடம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் சாா்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் பல்லடம் சேடபாளையம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக தானிய இயக்குநா் ரவிகேசவன் தலைமையிலான அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:
வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத் திட்டத்தில் கிலோ ரூ.100 என்ற மானிய விலையில் வழங்கப்பட்டது. அந்த விதைகளை வாங்கி சாகுபடி செய்த விவசாயிகளின் தோட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இதர மக்காச்சோள விதைகளைக் காட்டிலும், இது கூடுதல் விளைச்சல் தருவதால் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற வாய்ப்பு உள்ளது என்றனா்.
ஆய்வின்போது, பொங்கலுாா் வேளாண் நிலைய விஞ்ஞானிகள், பல்லடம் வட்டார வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu