3 மாதங்களாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தாத அதிகாரிகள்; எழுந்தது புகார்!

Tirupur News- 3 மாதங்களாக விவசாயிகள் கூட்டம் நடக்காததால் அதிகாரிகள் மீது புகார் (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., அமராவதி, ஏழு குளம் பாசனத்திட்டங்கள், மானாவாரி சாகுபடி ஆகியவற்றில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
கோட்ட அளவிலுள்ள விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில், கோட்டாட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம், மாதம்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அல்லது மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்திற்கு, ஒரு சில நாட்கள் முன்னதாக நடப்பது வழக்கம்.
இந்நிலையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கடந்த மூன்று மாதமாக நடத்தப்படாமலும், விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
அரசுத்துறைகள் சார்ந்து விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ள நிலையில், அதிகாரிகள் ஒருங்கிணைந்து, கோட்டாட்சியர் தலைமையில் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தாததால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
அரசு துறைகள் சார்ந்து விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. குறை தீர்க்கும் கூட்டங்களில், அரசு துறை அதிகாரிகளிடம் மனு அளித்து, நேரடியாக பேச வாய்ப்பு கிடைத்தது. தனிநபர் பிரச்னைகள், பொது பிரச்னைகளுக்காவது தீர்வு கிடைத்து வந்தது.
இரு தாலுகாவில் உள்ள பிரச்னைகள், கோட்ட அளவில் அதிகாரிகள் மட்டத்தில் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்தது. அனைத்து விவசாயிகளும், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது.
அதனால், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று, அரசு துறைகள் சார்ந்து, இருக்கும் பிரச்னைகளுக்கு மனு அளித்து, அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும், கடந்த மூன்று மாதங்களாக நடப்பதில்லை.
எனவே, மீண்டும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களை நடத்த, கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதை காரணம் காட்டி, விவசாயிகளை புறக்கணிக்காமல், கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது உடுமலை தாலுகா அலுவலகத்தில் உடனடியாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.
அதே போல், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களில், பெரும்பாலான அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்காமல், சம்பிரதாயமான கூட்டமாக நடத்தப்படாமல், தீர்வு காணும் கூட்டமாக அமைய வேண்டும்.
வருவாய்த்துறை, மின் வாரியம், பொதுப்பணித்துறை, சர்வே துறை, வேளாண் துறை என அனைத்து துறைகளிலும் ஏராளமான பிரச்னைகள் உள்ள நிலையில், விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையிலும் உடனடியாக குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.
இது வரை, நடந்த கூட்டங்களில் விவசாயிகள் கொடுத்த மனுக்களில், எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது, நிலுவையிலுள்ள மனுக்கள் குறித்து, விளக்கம் அளிக்க வேண்டும். அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu