ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தம்; தினமும் 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு
Tirupur News,Tirupur News Today- ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தினமும் 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- கழிவுப்பஞ்சு விலை உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட காரணங்களால் 160 ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மறுசூழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் ஜெயபால் கூறியதாவது,
தமிழகத்தில் கோவை, திருப்பூா், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 680 ஓ.இ.(ஓபன் எண்ட் மில்கள்) மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், திருப்பூா், கோவை, வெள்ளக்கோவில், உடுமலை, ராஜாபாளையம் ஆகிய பகுதிகளில் கிரே உற்பத்திக்கான ஓ.இ.மில்கள் அதிக அளவில் உள்ளன. கிரே நூல்களை பயன்படுத்தி விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. கலா் நூல்களில் பெட்ஷீட், லுங்கி, துண்டு, மெத்தை விரிப்பு உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருளான கழிவுப்பஞ்சு பருத்தி விலையில் இருந்து, சுமாா் 75 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.
அதேபோல, தமிழகத்தில் மின்சார கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான பீக் ஹவா்ஸ் கட்டணம் , டிமாண்ட் சாா்ஜ் கட்டணத்தால் தொழில் நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுப் பஞ்சு விலையை கட்டுப்படுத்தக் கோரியும் மின்சார கட்டணத்தை குறைக்கக் கோரியும், ஓ.இ.மில்களில் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
இதில் முதல்கட்டமாக தமிழகத்தில் 160 ஓ.இ. மில்களில் உற்பத்தி நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். மேலும் எஞ்சியுள்ள ஆா்டா்களை முடித்தவுடன் ஓரிரு நாள்களில் அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா், என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu