கால்நடைகளை தாக்கும் மழைக்கால நோய்கள்; உஷாராக இருக்க கால்நடைத்துறை எச்சரிக்கை
Tirupur News- கால்நடைகளை தாக்கும் மழைக்கால நோய்கள். (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலை ஆனைமலை, நெகமம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், விரைவில் பருவமழை தீவிரமடைய உள்ளது. இதனையடுத்து, மழை காலங்களில் கால்நடைகளை எவ்வாறு நோய்களில் இருந்து பாதுகாப்பது என்பது குறித்து அரசு கால்நடைத்துறையினர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி கால்நடைத்துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகள்
கால்நடைகள் அதிக நேரம் மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையில் நீர்த்தேங்க விடக்கூடாது. நீர்த்தேங்குவதன் மூலம் ஒட்டுண்ணி பிரச்சினைகள், சளி மற்றும் கொளம்பு அழுதல் போன்ற நோய் அதிகரிக்கும். குறிப்பாக ஆடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிகம் பாதிக்கப்படும். எனவே, சீரான வடிகால் அமைத்தல் அவசியம்.
குளிர் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் சமயங்களில் சாம்பிராணி மற்றும் வேப்பங்கொட்டை கலந்து கொட்டகையில் காலை மற்றும் மாலை வேலைகளில் புகை மூட்டுதல் வேண்டும். சுத்தமான குடிநீர் அளித்தல் அவசியம். மழைக்காலங்களில் ஈரமான புற்கள் அளிக்காமல் சற்று உலர வைத்து அல்லது உலர் தீவனமான வைக்கோல் மற்றும் கடலைக் கொடியுடன் அளித்தல் வேண்டும். குளிர்காலங்களில் குட்டிகளை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க போதிய சூட்டினை தர வேண்டும்.
அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுதல் அவசியம். குறிப்பாக கோமாரி, ஆட்டுக் கொல்லி மற்றும் துள்ளுமாரி நோய்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மடி நோய் வராமல் இருக்க கொட்டகை மற்றும் மாட்டின் மடியை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். கோழி கொட்டகையின் தரைப்பகுதியை ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஈரம் அதிகமானால் ரத்த கழிச்சல் நோய் பரவி பேரிழப்பு ஏற்படுத்தும்.
அக ஒட்டுண்ணிப் பிரச்சினைகளில் இருந்து கால்நடைகளை காத்துக் கொள்ள இயற்கை மருந்துகளான கோமியம் அல்லது தண்ணீர் 10 லிட்டர், நொச்சி இலை கரைசல் 50 கிராம், உன்னிச்செடி கரைசல் 50 கிராம், வசம்பு 50 கிராம் கலந்து கால்நடை கொட்டகையில் தெளிக்க வேண்டும். இந்த முறையை பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu