காட்டுப்பன்றிகளை விரட்டும் வாசனை திரவியம்; மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

காட்டுப்பன்றிகளை விரட்டும் வாசனை திரவியம்; மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

Tirupur News- காட்டுப்பன்றிகளால் பாதிப்படையும் விவசாயிகள் (கோப்பு படம்)

Tirupur News- மடத்துக்குளம் பகுதியில், விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட உதவும் வாசனை திரவியத்தை, அரசு மானிய விலையில் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம் விவசாயத்துக்கு சவாலாகவும், விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது. காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. விளைச்சல் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை, காய்கறிகளை சேதப்படுத்தி, விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. கால்நடைகளை தாக்கும் காட்டுப்பன்றிகள், சில நேரங்களில் மனிதர்களை தாக்கவும் செய்கின்றன.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட அமராவதி, உடுமலை, கொழுமம் வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட இரை விலங்குகளிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்திலும், இரைகளை தேடியும் அடிவார பகுதிகளுக்கு வந்த காட்டுப்பன்றிகள் அங்கேயே தங்கி விட்டன. அதுமட்டுமல்லாமல் வனப்பகுதியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேல் இடம் பெயர்ந்து பரவியுள்ளன.மேலும் அந்த பகுதிகளில் உள்ள புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல மடங்காக பெருகி விட்டன.

மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விளைநிலங்களுக்குள் கூட்டம் கூட்டமாக நுழையும் காட்டுப் பன்றிகள் பயிர்களைத் தின்றும் மிதித்தும் வீணாக்கி வருகின்றன. அத்துடன் கால்நடைகளை தாக்குவதுடன் மனிதர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. காட்டுப்பன்றிகளை விரட்டும் நோக்கத்தில் தாக்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லை.இதனால் காட்டுப்பன்றிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாற்று வழி தேட வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் விளைநிலங்களை சுற்றி சேலைகளை கட்டி விட்டால் அவை காற்றில் அசையும் போது அச்சத்தில் காட்டுப்பன்றிகள் ஓடி விடும். ஆனால் தற்போது சேலைகளை கிழித்து உள்ளே நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் அளவுக்கு அவற்றின் வாழ்வியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது புதிய முயற்சியாக ஒருவித வாசனையை வெளியிடக்கூடிய திரவத்தை பயன்படுத்தி வருகிறோம். சந்தையில் கிடைக்கும் அந்த திரவத்தை கயிறுகளில் நனைத்தோ அல்லது பாட்டில்களிலோ விளைநிலத்தைச் சுற்றி தொங்க விட வேண்டும். அதிலிருந்து வெளிவரும் விரும்பத்தகாத வாசனையால் காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் விளைநிலங்களை நெருங்குவதில்லை.

ஆனால் சற்று கூடுதல் செலவு பிடிக்கும். இந்த திரவத்தை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!