பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை

பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
X

பிச்சை எடுத்து ரூ. 1.5 லட்சம் சேர்த்ததாக கூறிய பெண்ணிடம்  விசாரணை நடத்தும் போலீசார்.

பண்ணாரி கோயிலில் பிச்சை எடுத்து சேர்த்ததாக ஒன்றரை லட்சம் ரூபாயுடன் சுற்றித்திரிந்த பெண்ணிடம், ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ரோடு, நல்லூர் சர்ச் அருகே 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சேலையில் கட்டுக்கட்டாக பணத்தை சுற்றி வைத்துக் கொண்டு, அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில், அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த மாநில வரி அலுவலர் குணசேகர், காவ உதவி ஆய்வாளர் விஜயகுமார், தலைமைக் காவலர் மணிமேகலை, சரவணக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர்அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆவணம் ஏதுமின்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த பெண் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அப்பணம், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலையில், கருவூலத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் துறையூர், திருமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மணிமேகலை (36) என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோயிலுக்குச் சென்று பிச்சை எடுத்த பணமே, தான் வைத்திருந்த பணம் என அதிகாரிகளிடம் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உதவி ஆணையாளர் (கணக்கு பொறுப்பு) தங்கவேல் ராஜன், பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும், போதையில் இருந்த அந்த பெண்ணை, ஆலங்காட்டில் உள்ள 'நோ ஃபுட் நோ வேஸ்ட்' என்ற காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் வைத்திருந்த பணம், உண்மையிலேயே பிச்சை எடுத்த பணம் தானா? அல்லது வேறு ஏதேனும் வழியில் கிடைத்த பணமா? போன்ற பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நல்லூர் காவல் நிலையத்துக்கு ரூ.1.50 லட்சம் பணம் தொலைந்ததாக புகார் வந்திருப்பதாகவும், அந்த பணமாக இருக்குமா? என்ற சந்தேக கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அந்தப்பெண் போதையில் இருந்ததால் உடனடியாக விசாரிக்க இயலாத நிலையில், பணம் அரசு கருவூலத்துக்கு சென்றிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், பிச்சை எடுத்த பணமா? அல்லது திருடப்பட்ட பணமா? என்பது, முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!