இரும்பு சக்கரம் பொருத்திய டிராக்டர்கள் தார் ரோட்டில் செல்ல தடை; மீறினால் அபராதம் என எச்சரிக்கை
Tirupur News- இரும்பு சக்கர டிராக்டர்கள், தார் ரோட்டில் செல்வதற்கு தடை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- காங்கயத்தை அடுத்துள்ள முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி எண்ணெய் வித்து பயிர் மற்றும் நஞ்சை சம்பா நெல் சாகுபடி நடக்கிறது.
இந்த ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம் 19- ந் தேதி முதல் தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாைலத்துறை, ஊராட்சி ஒன்றியம் மூலம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
முத்தூர், நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு செய்வதற்கு டிராக்டர்களில் இரும்பு சக்கரம் மாட்டப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் நெல் நாற்று நடவு உழவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் உழவு பணிகளை முடித்துக்கொண்டு இரும்பு சக்கரத்துடன் அப்படியே கிராம தார்ச்சாலைகள் மற்றும் பிரதான தார்ச்சாலைகளில் ஓட்டி செல்லப்படும் சூழ்நிலையில் தார்ச்சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விடும்.
இதுபோன்ற சூழலில் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் வயல்களில் உழவு பணிகளை முடித்துக்கொண்டு வரும்போது கிராம சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் இரும்பு சக்கரத்துடன் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே உழவு பணிகளை முடித்தவுடன் டிராக்டரில் இருந்து உடனடியாக இரும்பு சக்கரத்தை கழற்றி விட்டு மீண்டும் டயர் சக்கரத்தை மாட்டி கொண்டு சாலைகளில் செல்ல வேண்டும். மேலும் இரும்பு சக்கரத்துடன் தார்ச்சாலைகளில் ஓட்டிச்செல்லும் டிராக்டர் டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் மூலம் அபராதத்துடன் உரிய சட்ட ரீதியான நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu