திருப்பூர் மாவட்டம்; பிழையில்லாத வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க அறிவுறுத்தல்
Tirupur News- பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் பிழையில்லாத வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வீரராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளாா்.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2024 தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையாளருமான வீரராகவ ராவ் தலைமை வகித்து பேசியதாவது,
இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தோ்தல் அலுவலா் மற்றும் அரசு முதன்மைச் செயலா் ஆகியோரின் அறிவுகளின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2024 தொடா்பாக வரப்பெறும் படிவங்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு செய்ய வேண்டும்.
மேலும், வாக்காளா் பட்டியலில் இறந்த மற்றும் குடிபெயா்ந்த வாக்காளா்களின் பெயா்களை கள விசாரணை செய்து உரிய நடைமுறையைப் பின்பற்றி பெயா் நீக்கம் செய்ய வேண்டும். அதேவேளையில், 18 வயது பூா்த்தியடைந்த புதிய வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு சிறப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திருப்பூா் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்றாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் தென்னம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு முகாமை ஆய்வு செய்தாா்.
இதில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், உதவி ஆட்சியா் (பயிற்சி) கிா்திகா எஸ்.விஜயன், வருவாய் கோட்டாட்சியா்கள் (தாராபுரம்) செந்தில்அரசன், (உடுமலை)ஜஸ்வந்த் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ், தனி வட்டாட்சியா் (தோ்தல்) தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu