18 வயது நிரம்பியவர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அறிவுறுத்தல்
Tirupur News- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தல் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில், வரும் 27 -ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக 7 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 2,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெறுகின்றன.
அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 18, 19-ம் தேதிகளில் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், தாசில்தார்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில், சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்
Voters.eci.gov.in என்கிற இணையதளம், VSP மொபைல் செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து வரும் 2024 ஜனவரி 5ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியல் என்பதால், இந்தாண்டுக்கான வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி முக்கியத்துவம் பெறுகிறது.
வீடுவீடாக செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக, இறந்தோர் விவரங்கள், பெயர் சேர்ப்பதற்காக புதியவர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
வருகிற 27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்படும். வாக்காளர்கள் தவறாமல் வரைவு பட்டியலை பார்வையிடவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், புகைப்பட விவரங்கள், முகவரி, தொகுதி சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். மாறுதல்கள் இருப்பின் சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில், தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்திவருகிறது. இதற்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், இளம் பெண்கள் தவறாமல், தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu